பிரிட்டன் பெண் ஒருவர் தனது ஐந்துமாத குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்துக்கொண்டிருக்கும்போது அவரை வெளியேற்றிய நீச்சல்குள நிறுவனம் ஒன்றின் மீது வழக்கு தொடுக்க முடிவு செய்துள்ளார். மேலும் அந்த நிறுவனத்திற்கு எதிராக பொதுமக்களை திரட்டி போராட்டம் நடத்தவும் அவர் முடிவு செய்துள்ளதால் பிரிட்டனில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பிரிட்டனை சேர்ந்த 29 வயது பெண் நடாஷா பார்நெட். இவர் தனது ஐந்து மாத குழந்தையுடன் நேற்று அங்குள்ள பிரபல நீச்சல் குளம் ஒன்றுக்கு சென்றுள்ளார். சில நிமிடங்களில் தனது குழந்தை பசியால் அழுததால் குழந்தைக்கு நீச்சல் குளத்தின் அருகில் உட்கார்ந்து தாய்ப்பால் கொடுத்தார். இதை பார்த்த நீச்சல்குள நிர்வாகிகள் நடாஷாவையும் அவருடைய குழந்தையையும், வெளியேற்றினர்.
தங்கள் நிறுவன விதிகளின்படி நீச்சல்குளத்தில் உணவு பொருட்கள் தடை செய்யப்பட்டுள்ளதாக கூறும் நீச்சல்குள நிறுவனம், தாங்கள் தங்கள் சட்டதிட்டத்தின்படிதான் நடந்துள்ளதாக கூறியுள்ளது. ஐந்து மாத குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்ததை தடுக்கும் வகையில் நடந்து கொண்ட நீச்சல்குள நிர்வாகிகள் மீது வழக்கு தொடுக்கவும், பொதுமக்களை திரட்டி போராட்டம் நடத்தவும் நடாஷா முடிவு செய்துள்ளது. இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.