பெருகிவரும் போலி கேன் குடிநீர் விற்பனை – பொது குழாய்களில் இருந்து தண்ணீர் பிடிக்கின்றனர்

bottles

சிலர் சாப்பிடாமல் தண்ணீர் மட்டுமே குடித்து பல ஆண்டுகள் உயிர் வாழ்ந்ததாக கூறப்படுகிறது. இதிலிருந்து தண்ணீரின் மகத்துவமும், முக்கியத்துவமும் வெளிப்படுகிறது. டாக்டர்களும் ஒவ்வொருவரும் நாளொன்றுக்கு 2 லிட்டர் தண்ணீராவது குடிக்க வேண்டும், அப்போதுதான் ஆரோக்கியமாக வாழமுடியும் என்கின்றனர். இவைகளுக்கு மாறாக இன்றைய காலகட்டத்தில் தண்ணீர் குடிக்காமல் இருந்தாலே பல ஆண்டுகள் உயிர்வாழலாம் என்று கூறக்கூடிய அளவிற்கு நீரின் தூய்மை பாதிப்படைந்து வருகிறது. பெரும்பாலான நோய்கள் நீரின் மூலம் பரவும் நிலையில், ஒவ்வொருவரும் நீரைக் காய்ச்சி குடிக்க வேண்டியது அவசியம்.

இந்நிலையில், வேலூர் மாவட்டத்தில் போதிய அளவிற்கு மழை பெய்யாத காரணத்தால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. எனவே, குடிநீர் கேட்டு காலிகுடங்களுடன் ஆங்காங்கே பொதுமக்கள் சாலைமறியல், போராட்டம் ஆகியவற்றில் ஈடுபட்டு வருவது தொடர் கதையாகிவிட்டது. இவற்றை சமாளிக்க மாநகராட்சி நிர்வாகமும் அவ்வப்போது டிராக்டர்களில் குடிநீர் சப்ளை செய்து வருகிறது. அந்த தண்ணீரும் உப்பு நீராகவே இருப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். டெங்கு, மலேரியா போன்ற நோய்கள் பொதுமக்களை பெரிதும் அச்சுறுத்திவிட்டது.

எனவே, சுத்தமான நீரை குடிக்க வேண்டும் என்பதற்காக பெரும்பாலானவர்கள் தங்கள் வீடுகளில் கேன்குடிநீரை மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர். அதற்காக அதிகப்படியான தொகையையும் செலவிடுகின்றனர். கேன் குடிநீர் முழுமையாக சுத்திகரிக்கப்பட்டு, கிருமிகள் அழிக்கப்பட்டுள்ளது என்ற பொதுமக்களின் நம்பிக்கையே இதற்கு காரணம். பொதுமக்களின் இந்த நம்பிக்கையை சிலர் வியாபாரமாக்கிக் கொண்டு பணம் சம்பாதித்து வருகின்றனர். இதற்கு அரசு அதிகாரிகளும் சிலர் உடந்தையாக இருப்பதாக கூறப்படுகிறது. சிலர் குடிநீரை சுத்திகரிக்காமலே கேன்களில் அடைத்து விற்பனை செய்துவருகின்றனர்.

இதனால், நீரில் உள்ள கிருமிகள் அழியாமல் அப்படியே இருக்கிறது. இயற்கையாக மனிதனுக்கு கிடைக்க வேண்டிய கால்சியம், இரும்பு போன்ற சத்துகள் மட்டுமே நீரில் இருந்து நீக்கப்படுகிறது. இது ஒருபுறம் இருக்க சிலர் குடிநீரை சுத்திகரிக்காமலே விற்பனை செய்து வருகின்றனர். இதில் சிலர் காலிகேன்களை ஏற்றிச் செல்லும்போது வழியில் எங்காவது பொது குழாய்களில் தண்ணீர் பிடித்து வெறும் 50 பைசா செலவில் அதற்கு சீல் வைத்து ரூ.30க்கு விற்பனை செய்துவிடுகின்றனர். சில கம்பெனிகளும் இதுபோன்ற முறைகேடுகளில் ஈடுபட்டு வருகின்றன. ஆனால் கம்பெனி உரிமையாளர்கள் தாங்கள் முழுமையாக சுத்திகரித்து விற்பனை செய்வதாகவும், எங்கள் கேன்களை அனுமதி பெறாத சில கம்பெனிகள் பயன்படுத்துவதாகவும் கூறிசமாளித்துவிடுகின்றனர்.

இதுகுறித்த செய்திகள் ஏற்கனவே தினகரன் நாளிதழில் படத்துடன் வெளியானது. அதிகாரிகளும் அதன்பேரில் நடவடிக்கை எடுத்து வேலூர் மாவட்டத்தில் 31 குடிநீர் கம்பெனிகளுக்கு சீல் வைத்தனர். ஆனால், தற்போது அதில் பல்வேறு கம்பெனிகள் மீண்டும் செயல்பட தொடங்கியதோடு, புதியதாக 100க்கும் மேற்பட்ட கம்பெனிகள் உருவெடுத்துள்ளது. குடியிருப்புகளில் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படுவதால், பொதுமக்கள் நடவடிக்கை எடுக்கக் கோரிஅதிகாரிகளிடம் முறையிடுகின்றனர். ஆனால் கோரிக்கை மனுக்களை வாங்க மறுக்கும் அதிகாரிகள் இதற்கு இந்த துறை பொறுப்பு கிடையாது என கூறி, வேறு துறைக்கு அனுப்பிவைக்கின்றனர்.

அங்கிருந்து வேறொரு துறைக்கு அனுப்பப்படுகின்றனர். அதிகாரிகள் சிலர், குடிநீர் கேன்களுக்கு சீல் வைத்து விற்பனை செய்தால் மட்டுமே சோதனை நடத்த முடியும். தண்ணீர் சப்ளை செய்பவர்களை நாங்கள் கண்டுகொள்ளமாட்டோம், அந்த தண்ணீர் முழுமையாக சுத்திகரிக்கப்பட்டதா என்பதை மட்டுமே சோதனை செய்ய அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது, தண்ணீரில் கெமிக்கல் கலந்துள்ளதா என்பதை மட்டுமே சோதனை செய்வோம் என ஒவ்வொரு துறையும் காரணங்களை கூறி அலைகழிக்கின்றனர்.

இப்படி பொதுமக்களும் கலெக்டர் அலுவலகம், மாசுகட்டுப்பாடு வாரியம், சுகாதாரப் பணிகள், தாசில்தார், பொதுப்பணித்துறை, பசுமை தீர்ப்பாயம், உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை என அனைத்து துறைகளுக்கும் மாறி, மாறி சென்று முறையிடுகின்றனர். ஆனால், எந்த துறையில் இதுகுறித்து புகார் தெரிவிப்பது என்பது புதிராகவே உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுத்து போலி கேன் குடிநீரை தடை செய்ய வேண்டும், நிலத்தடி நீர்மட்டம் பாதிப்படைவதை தடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

கலெக்டர் உத்தரவை காற்றில் பறக்கவிட்ட அதிகாரிகள்

வேலூர் மாவட்டத்தில் நீர்மட்டம் குறைந்து வரும் நிலையில், குடியிருப்பு பகுதிகளில் இருந்து நீரை உறிஞ்சி விற்பனை செய்ய அனுமதி கிடையாது. இதை மீறுபவர்கள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டர் நந்தகோபால் உத்தரவிட்டிருந்தார். ஆனால், தொடர்ந்து அனுமதி பெறாமல் சில இடங்களில் குடிநீர் உறிஞ்சி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. காட்பாடி அடுத்த பழைய காட்பாடி முத்தமிழ்நகர் மற்றும் வசந்தபுரத்தில் செயல்பட்டு வந்த 2 குடிநீர் கம்பெனிகளுக்கு கடந்த சில மாதத்திற்கு முன்பு சீல் வைக்கப்பட்டது. குடியிருப்பு பகுதியில் குடிநீரை உறிஞ்சி விற்பனை செய்ய அனுமதி வழங்கப்படாத நிலையில், சீல் வைக்கப்பட்ட கம்பெனிகள் தற்போது மீண்டும் செயல்பட்டு கொண்டிருக்கிறது. இதனால், அதிகாரிகள் கலெக்டரின் உத்தரவை காற்றில் பறக்க விட்டுவிட்டதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

Leave a Reply