தொடுதிரைகளின் காலம் இது. ஸ்மார்ட் போன், டேப்லட் என எல்லாவற்றையும் தொட்டால் திரை மலர்கிறது. எனவே கணினிக்கு அதிக வேலை இல்லை, கணினியில் பயன்படுத்தும் மவுஸுக்கும் அதிக மவுசு இல்லை என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது. ஆனால், போலந்து நிறுவனம் ஒன்று மவுசுக்குள் கணினியைக் கொண்டு வந்து பிசி,மவுஸ் இரண்டுக்கும் புதிய வழி காட்டியுள்ளது.
போலந்து சாப்ட்வேர் வல்லுநர் ஜெம்ஸ்லா ஜெல்ஜிக் ( Przemysław Strzelczyk ) தலைமையிலான குழு மவுஸ் பாக்ஸ் எனும் பெயரில் இந்த டூ இன் ஒன் சாதனத்தை உருவாக்கியுள்ளது. இந்தச் சாதனத்தை மவுசாகப் பயன்படுத்தலாம். இதையே கணினியாகவும் பயன்படுத்தலாம்.
அதற்கேற்ப சக்திவாய்ந்த பிராசஸர் மற்றும் 128 ஜிபி நினைவுத்திறனைக் கொண்டிருக்கிறது. அதோடு வயர்லெஸ் வசதியும் உண்டு. ஒரு மானிடர் இருந்தால் போதும், அதில் கேபிள் மூலம் மவுசை இணைத்துவிட்டால் கணினி ரெடி. மவுஸ் பேட் மூலம் வயர்லெஸ் வழியே சார்ஜ் செய்து கொண்டுவிடலாம்.
கணினிகளைக் கையில் எடுத்துச்செல்வதில் எப்போதுமே சிக்கல் இருந்திருக்கிறது, புதுமையான வடிவமைப்பு மூலம் இதற்குத் தீர்வு கண்டிருக்கிறோம் என மவுஸ் பாக்ஸ் குழு சொல்கிறது. எல்லாம் சரி என்ன விலை? எப்போது விற்பனைக்கு வருகிறது? இரண்டுமே இன்னும் முடிவாகவில்லை. முதலில் முன்னோட்ட மாதிரியைத் தயாரித்து விட்டு அதன் பிறகு வெகுஜன உற்பத்தியைத் தொடக்கத் திட்டமிட்டுள்ளது.
மவுசுக்குள் கம்ப்யூட்டர் செயல்பாட்டை மேலும் புரிந்துகொள்ள: http://mouse-box.com/