ஆண்ட்ராய்டுக்கு போட்டியாக வருகிறது புது இயங்கு பொறி Mozila!

5-350x250

உலகில் உள்ள ஸ்மார்ட் போன்களில் 96 சதவிகிதத்திற்கும் அதிகமான போன்கள் ஆப்பிள் அல்லது ஆண்ட்ராய்ட் இயங்கு பொறியை கொண்டே செயல்படுவதாக ஐ.டி.சி. (IDC-International data corporation) என்ற தொழில்நுட்ப வர்த்தக நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஸ்மார்ட் உலகை ஆண்டு கொண்டிருக்கும் இந்நிறுவனங்களுக்கு போட்டியாக, புதிய இயக்கு பொறியை அறிமுகப்படுத்த இருக்கிறது மோசிலா (Mozila).

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை (கூகுள் குரோமின் வருகைக்கு முன்பு) கணினிகளில் பரவலாக பயன்படுத்தப்பட்டு வந்த தேடு பொறியாக விளங்கியது மோசிலா பயர்பாக்ஸ். அதில் தான் பெற்றிருந்த செல்வாக்கை இழந்த காரணத்தினால், தற்போது ஸ்மார்ட் போன்கள் பக்கம் தன் சிலிக்கான் தலையைத் திருப்பியுள்ளது இந்நிறுவனம். அடுத்து வருகின்ற 2016ல் H5OS என்ற தனது இயங்கு பொறியை அறிமுகப்படுத்தும் முடிவில் உள்ளது இந்த நிறுவனம்.

இதுகுறித்து மோசிலாவின் முன்னாள் தலைவரான சீனாவைச் சேர்ந்த லீ கோங் செய்தியாளர்களிடம் கூறும்போது, ”இப்பொழுது பயன்பாட்டில் இருக்கும் இயங்கு பொறிகள் எல்லாவற்றையும்விட அதிக சக்தி வாய்ந்த, எளிமையான H5OS என்ற இயங்கு பொறியை வருகின்ற 2016 ஆம் ஆண்டில் மோசிலா அறிமுகப்படுத்தப் போகிறது. இது, ஸ்மார்ட் போன்களின் உலகில் ஒரு மைல் கல்லாக இருக்கும்.

இந்த இயங்கு பொறி, ஆண்ட்ராய்டுடன் ஒப்பிடும்போது அதிக வேகத்துடனும், குறைவான சக்தியை (energy) மற்றும் இடத்தை (storage) பயன்படுத்தும் திறனுடனும் அமைத்திருக்கும். மேலும், இது மிகமிக எளிமையான, அனைவராலும் புரிந்துகொள்ளக் கூடிய தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டு உள்ளது” என்றார்.

எதனுடனும் ஒப்பிட்டுப் பார்க்க முடியாத வகையில் வடிவமைக்கப்பட இருப்பதாக கூறப்படும் இந்த இயங்கு பொறி, எந்த வகையான மொபைல் போன்களிலும் பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்படுமாம். இது அனைத்து வகையான தொடுதிரை, டி.வி., கார், டேப்லெட், வாட்ச் போன்றவற்றில் எளிமையாக பயன்படுத்தும் வகையிலும் வடிவமைக்கப்படுமாம்.

ஏற்கனவே ஸ்மார்ட் போன் உலகில் தன் கால்களை பதிக்க நினைக்கும் லினக்ஸ் நிறுவனத்தின் உபுன்டு (ubuntu), சாம்சங் நிறுவனத்தின் ஸ்மார்ட் வாட்ச்களில் பயன்படுத்தப்படும் டிசன் (Tizen), ஹவாய் (huawei) நிறுவனத்தின் ஓ.எஸ் போன்றவை பெரிதாக பிரபலம் அடையாத நிலையில், புதிதாக மோசிலா வேறு தனது H5OS இயங்கு பொறி குறித்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.

மோசிலாவின் இந்த அறிவிப்பு தற்போது பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருந்தாலும், ஸ்மார்ட் போன் திரைகளுக்குள் நடந்து கொண்டிருக்கும் இந்த மறைமுகப் போட்டியில் மோசிலா வெளியிடும் இயங்கு பொறி வேகம் எடுக்குமா?

Leave a Reply