கடவுளுக்கு காணிக்கையாக பங்குகள், பத்திரங்கள். மத்தியப் பிரதேச அரசின் புதிய ஏற்பாடு
பங்குகள், பத்திரங்களை கடவுளுக்கு காணிக்கையாகச் செலுத்தும் வசதியை பக்தர்களுக்கு அளிக்க மத்தியப் பிரதேச அரசு புதிய ஏற்பாடு செய்து வருகிறது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஏற்கெனவே இந்த காணிக்கை முறை உள்ளது. இதனைப் பின்பற்றி இப்போது மத்தியப் பிரதேசத்தில் 7 கோயில்களில் கடவுளுக்கு பங்குகள், பத்திரங்களைக் காணிக்கையாக செலுத்தும் வசதி பக்தர்களுக்கு செய்து தரப்பட இருக்கிறது.
இது தொடர்பாக அந்த மாநில அறநிலையத்துறை கூடுதல் செயலாளர் கே.கணேஷ், இந்தூரில் வியாழக்கிமை செய்தியாளர்களிடம் கூறியதாவது:
உஜ்ஜைனில் பிரசித்தி பெற்ற மகாகாளேஷ்வரர் கோயில், ஓங்காரேஷ்வரர் கோயில், பிஜாசன் தேவி கோயில், மைஹார் தேவி கோயில், கஜ்ரானா விநாயகர் கோயில், ராம்ராஜ் கோயில் உள்ளிட்ட 7 கோயில்களின் பெயரில் டி-மேட் கணக்குகள் தொடங்கப்படவுள்ளன. இதன் பிறகு மும்பை, தேசிய பங்குச் சந்தையில் வாங்கப்படும் பங்குகளை பக்தர்கள் கடவுளுக்கு காணிக்கையாகச் செலுத்த முடியும். கோயில்களின் வருவாயை அதிகரிக்கும் நோக்கில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது தொடர்பாக இந்தக் கோயில்கள் அமைந்துள்ள மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இத்திட்டத்தை ஆய்வு செய்து அவர்கள் அளிக்கும் பரிந்துரைகளின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார் அவர்.