சென்னை அண்ணாசாலையில் திடீர் விபத்து: போக்குவரத்து ஸ்தம்பிப்பு
சென்னை அண்ணாசாலையில் உள்ள தடுப்புக் கம்பத்தில் மோதி அரசுப் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் ஓட்டுனர் உள்பட 8 பயணிகள் படுகாயமடைந்ததால் அந்த பகுதியே பரபரப்பில் ஆழ்ந்துள்ளது.
சென்னையில் உள்ள அண்ணாசாலையில் காலை முதல் இரவு வரை வாகனங்கள் அதிகளவில் சென்று கொண்டிருப்பதால் பிசியான சாலையாக இருக்கும். இந்த நிலையில் மேற்கு சைதாப்பேட்டையில் இருந்து சென்னை சென்ட்ரல் நோக்கி சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து ஒன்று ஸ்பென்சர் பிளாசா அருகேயுள்ள பேருந்து நிறுத்தம் அருகே வந்த போது திடீரென்று கட்டுப்பாட்டை இழந்தது. அதில், சாலையில் வைக்கப்பட்டிருந்த வழிகாட்டும் அறிவிப்புப் பலகையின் தடுப்புக் கம்பியில் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில், அந்த அறிவிப்புப் பலகை பேருந்தின் முன்பக்கத்தின் மீது விழுந்தது. இதில், பேருந்தின் முன்பக்கம் முழுவதும் சேதமடைந்தது. இந்த கோர விபத்தில் 6 பெண்கள் உள்பட 8 பேர் படுகாயமடைந்தனர். இந்த விபத்தால் அண்ணா சாலையின் பெரும்பகுதி போக்குவரத்து நெருக்கடியால் பாதிக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.