ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் இயக்குநர்களாக முகேஷ் அம்பானியின் வாரிசுகள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக உறுதியான தகவல்கள் வெளிவந்துள்ளன.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் உரிமையாளராக முகேஷ் அம்பானி, தனது 24 வது வயதில் 1981ஆம் ஆண்டில் பொறுப்பேற்றார். சரியாக 33ஆண்டுகள் கழித்து அதே நிருவனத்திற்கு அவருடைய மகன் மற்றும் மகள் இயக்குனர்களாக சமீபத்தில் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இருவரும் இந்தியாவின் பெரிய தனியார் நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் டெலிகாம் நிறுவனம் மற்றும் சில்லரை நிறுவனத்தின் இயக்குநர்களாக இனி செயல்படுவார்கள்.
முகேஷ் அம்பானியின் இரட்டைக்குழந்தைகளான மகள் இஷா மற்றும் ஆகாஷ் ஆகிய இருவருக்கும் தற்போது 23 வயதுதான் ஆகின்றது. இந்த இளவயதில் இவர்கள் இருவரும் இயக்குனர்களாக பொறுப்பேற்றுக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர்களுக்கு ஆனந்த் என்றொரு சகோதரரும் உள்ளார். அவர் இங்கிலாந்தில் தனது படிப்பை தொடர்ந்து வருகிறார்.
இஷா, யேல் பல்கலைக் கழகத்தில் படித்துவிட்டு அமெரிக்காவில் உள்ள மெக்கின்சி நிறுவனத்தில் பணிபுரிந்த அனுபவம் உள்ளவர். அதேபோல் ஆகாஷ், பிரவுன் பல்கலைக் கழகத்தில் படித்துவிட்டு ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் குடும்ப நண்பர் மனோஜ் மோடியுடன் இணைந்து பணிபுரிந்துள்ளார். இருவரும் நிறுவனத்தின் ஆண்டு பொது கூட்டங்களில் கலந்து கொண்டுள்ளனர்.