தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள புங்கவர்நத்தம் கிராமத்தில் காளியம்மன் கோயில் திருவிழாவில், முள் படுக்கையில் துள்ளிக்குதித்து பக்தர்களுக்கு சாமியார் அருள்வாக்கு சொன்னார். புங்கவர்நத்தம் காளியம்மன் கோயில் திருவிழா ஆண்டு தோறும் நடந்து வருகிறது. இந்தாண்டு திருவிழா இரு தினங்களுக்கு முன்பு துவங்கியது. முதல்நாளில் காளியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. இரவில் அம்மன் சப்பரத்தில் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். இரண்டாம் நாள் விழாவில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. அதன் பிறகு ஊட்டு எடுத்தல் நிகழ்ச்சி நடந்தது. அதன் பின் சுடலை மாடசுவாமி மயான வேட்டை நிகழ்ச்சி நடந்தது. பின் கோயில் முன்பாக 6 அடி உயரம். அகலத்தில் முட்கள் நிரப்பப்பட்டது. அதில் சுடலை மாடசாமியாக வந்தவர் துள்ளிக்குதித்தும், படுத்து உருண்டும் பக்தர்களுக்கு அருள் வாக்கு வழங்கினார். பின் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பொதுமக்கள் கூறியதாவது: ஆண்டு தோறும் காளியம்மன் திருவிழா நடக்கும். அப்போது உலக நன்மை வேண்டியும், மழை வளம் செழிக்கவும், மக்கள் நல்ல சுகத்துடன் வாழவும் சுவாமி முள் படுக்கையில் துள்ளி குதித்தும், படுத்து உருண்டும் அருள் வாக்கு சொல்வார். அவர் சொல்வது பழிக்கும், தொடர்ந்து இந்த திருவிழாவை ஆண்டு தோறும் நடத்தி வருகிறோம், என அவர்கள் தெரிவித்தனர்.