4 பேர் சேர்ந்து ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்வது சாத்தியமற்றது. முலாயம் சிங்!
ஒரு பெண்ணை நான்கு பேர் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்வது நடைமுறையில் சாத்தியமில்லை என முன்னாள் உ.பி. முதல்வரும் சமாஜ்வாதி கட்சித் தலைவருமான முலாயம் சிங் யாதவ் தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே பாலியல் பலாத்காரம் குறித்து ஒருசில தலைவர்கள் சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டு வாங்கிக்கட்டிக்கொண்ட நிலையில், முலாயம்சிங்கின் இந்த கருத்து கடும் கண்டனத்துக்குரியது என பெரும்பாலான கட்சி தலைவர்கள் கூறியுள்ளனர்.
உத்தரபிரதேச மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு குறித்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய முலாயம் சிங், ஒரு பெண்ணை ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்தாலே 4 பேரின் பெயர்கள் புகாரில் இடம் பெறுகிறது. 4 பேர் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்தனர் என்று புகாரில் பதிவு செய்யப்படுகிறது. இது சாத்தியமாக இருக்க முடியுமா? இது நடைமுறையில் கிடையாது. ஒருவர் பார்த்துக் கொண்டு இருந்து இருப்பார். மற்றொருவர் தவறு செய்து இருப்பார். அங்கிருந்த நான்கு பேரும் சகோதரர்களாக இருப்பார்கள். பின்னர் அவர்கள் நான்கு பேர் மீது புகார் தெரிவிக்கப்பட்டு இருக்கும்” என்று கூறினார்.
முலாயம் கருத்தை வன்மையாக கண்டிப்பதாக உ.பி மாநில பாஜக தலைவர் ஷாஜியா இல்மி கூறியுள்ளார். அவர் இன்று கூறுகையில், “பாலியல் பலாத்காரம் முலாயம் சிங் யாதவால் தூண்டப்பட்டு உள்ளது. கூட்டு பாலியல் பலாத்காரத்தை அவர் கேள்விபடவில்லையா? இது வருந்தத்தக்கது” என்று கூறியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோபா ஓஜா கூறியபோது, “முன்னதாகவே இதுபோன்ற அறிக்கையை கொடுத்து இருந்தார். இன்று கூட்டு பாலியல் பலாத்காரம் என்பது சாத்தியமற்றது என்று கூறியுள்ளார். இதுபோன்ற அறிக்கைகள், பாலியல் பலாத்காரம் செய்யும் குண்டர்களை ஊக்குவிக்கும் விதமாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்