முல்லை பெரியாறு அணை பகுதியில் மத்திய தொழிலக பாதுகாப்புப் படையினரை பாதுகாப்புக்கு நிறுத்த மத்திய அரசுக்கு உத்தரவிட கோரி தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் கேரளாவுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
முல்லை பெரியாறு அணையின் பாதுகாப்புக்கு மத்திய தொழிலக பாதுகாப்புப் படையினரை பணியமர்த்தக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு முறையிட்டுள்ளது. இந்த வழக்கு இன்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தத்து தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அணையின் பாதுகாப்புக்கு மத்திய படையினரைப் பணியமர்த்த வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி தமிழகம் தரப்பில் வாதங்கள் வைக்கப்பட்டன..
இதைத் தொடர்ந்து, இந்த விவகாரம் தொடர்பாக விரிவான பதிலளிக்குமாறு கேரள அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. முன்னதாக, முல்லைப் பெரியாறு அணையில் மத்திய தொழிலக பாதுகாப்புப் படையினரைப் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த தேவையில்லை என மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது.
இதுதொடர்பாக மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில், முல்லைப் பெரியாறு அணையில் மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படையினரைப் பணியமர்த்த தேவையில்லை. சட்டம் ஒழுங்கு பிரச்சினை மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. எனவே கேரள அரசு கோரினால் அணைக்கு மத்திய தொழிலக பாதுகாப்புப் படையினரைப் பணியில் அமர்த்துவது தொடர்பாகப் பரிசீலிக்கப்படும் என்று கூறியுள்ளது.
கேரளாவில் உள்ள முல்லைப் பெரியாறு அணையைத் தமிழகம் பராமரித்து வருகிறது. ஆனால் அணை பாதுகாப்புப் பணியை கேரள போலீஸார் மேற்கொண்டு வருகின்றனர். இதற்கான செலவை தமிழக அரசு அளித்து வருகிறது.
முன்னதாக, முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் மத்திய தொழிலகப் பாதுகாப்பு படையினரை பாதுகாப்புக்கு நிறுத்த மத்திய அரசுக்கு உத்தரவிட கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. முல்லைப் பெரியாறு அணை பகுதியில் போதிய பாதுகாப்பு இல்லை என்றும் தமிழக அரசு அதிகாரிகள் பராமரிப்பு பணிகளுக்கு செல்லும் போது கேரளா அனுமதி மறுப்பதாகவும் தமிழகம் மனுவில் கூறியிருந்தது.
இதற்கு பதிலளித்த கேரளா, முல்லை பெரியாறில் மத்திய பாதுகாப்பு படையினரின் பாதுகாப்பு தேவையில்லை என்று கூறியது. இது தொடர்பாக மத்திய அரசு இப்போது பதில் மனு தாக்கல் செய்துள்ளது.