மும்பை விமான நிலையத்தின் மேல் மர்ம பொருட்கள் பறந்ததால் பெரும் பரபரப்பு.

mumbai airportகடந்த 1993ஆம் ஆண்டில் மும்பையில் தொடர் வெடிகுண்டு நடந்த சம்பவத்திற்கு பின்னர் மும்பை நகரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் மும்பை விமான நிலையத்திற்கு மேல் சில மர்ம பொருட்கள் பறந்ததால் மும்பை மக்களிடையே பெரும் பரபரப்பும், பீதியும் ஏற்பட்டது.

கடந்த சனிக்கிழமை மாலை ஜெட் ஏர்வேஸ் விமானி தனது விமானத்தை பறக்க முயன்றபோது மும்பை விமான நிலையத்திற்கு மேல் மர்ம பொருட்கள் பறந்ததை பார்த்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த விமானி, உடனடியாக விமானத்தை டேக்-ஆப் செய்யாமல் விமான கட்டுப்பாட்டு மையத்திற்கு தகவல் கொடுத்தார். இதனையடுத்து உடனடியாக விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் உஷார்படுத்தப்பட்டனர்.  

சில அதிகாரிகள் இது ரிமோட் மூலம் இயக்கப்படும் பாராசூட்டாக இருக்கலாம் என்று கூறினர். இந்நிலையில் இது தொடர்பாக பேட்டியளித்த மும்பை விமான நிலைய அதிகாரி ஒருவர், மும்பை ஜூஹூ கடற்கரையில் காற்றில் பறக்கவிடப்படும் வான் விளக்குகள் (air lanterns) வார இறுதியில் அதிகம் விற்பனை செய்யப்படுவதாகவும், அவற்றில் சில காற்றில் பறந்து விமான நிலையத்திற்கு மேலே வந்திருக்கலாம் என்றும் தெரிவித்தார்.

இதனிடையே விமான நிலையத்தின் மீது பறந்த மர்ம பொருள் என்ன என்பது குறித்தும், அதனை அனுப்பியவர்கள் யார் என்பது குறித்தும் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இதனால் மும்பை விமான நிலையத்தை சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply