மகாராஷ்டிர மாநிலத்தில் மும்பை அருகேயுள்ள அந்தேரி பகுதியில் 22 மாடி ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் கட்டிடம் ஒன்றில் நேற்று முன் தினம் காலையில் ஏற்பட்ட தீவிபத்தில் தீயணைப்பு வீரர் ஒருவர் பரிதாபமாக மரணம் அடைந்தார். மேலும் 25 பேர் வரை படுகாயம் அடைந்துள்ளனர்.
மும்பை அருகே உள்ள அந்தேரியில் லோட்டஸ் வர்த்தக கட்டிடம் என்ற 22 மாடி கட்டிடத்தின் 21வது மாடியில் நேற்று முன் தினம் திடீரென தீப்பிடித்தது. அந்த தீ மளமளவென 20வது மாடிக்கும் பரவியது.
இந்த தீ விபத்து குறித்து தகவல் அறிந்தவுடன் 22 வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்புப்படையினர் தீயை அணிஅக்க பலமணி நேரம் போராடினர். தீயணைப்பு வீரர்கள் 20 வது மாடியில் இருந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது அவர்களை சுற்றி தீ பரவியதல் 20க்கும் மேற்பட்ட தீயணைப்பு படைவீரர்கள்தீயில் சிக்கிக்கொண்டனர்.
இதையடுத்து தீவிபத்தில் சிக்கிய தீயணைப்பு வீரர்களை மீட்க, கடலோர காவல்படையினர் அழைக்கப்பட்டனர். கடலோரக்காவல் படையினர் ஹெலிகாப்டர் மூலம் விரைந்து வந்து 20 மாடியில் சிக்கியிருந்த தீயணைப்பு வீரர்களை காப்பாற்றினர். இந்த விபத்தில் சிக்கி வீரர் ஒருவர் உயிரிழந்ததாகவும், மற்றவர்கள் படுகாயங்களுடன் மீட்கப்பட்டதாகவும் கடலோர காவல்படை அதிகாரிகள் கூறினர்.
இந்த தீவிபத்தில் அந்தக் கட்டடத்தில் இருந்த பொதுமக்கள் 20 பேர் வரை காயம் அடைந்ததாக தெரிகிறது. காயம் அடைந்த அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். தீவிபத்து எதனால் ஏற்பட்டது என்றும், சேதவிபரங்கள் குறித்தும் போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.