மும்பை ஐகோர்ட்டின் அதிரடி உத்தரவால் ஐ.பி.எல் போட்டிக்கு ஏற்பட்ட திடீர் சிக்கல்

மும்பை ஐகோர்ட்டின் அதிரடி உத்தரவால் ஐ.பி.எல் போட்டிக்கு ஏற்பட்ட திடீர் சிக்கல்

IPL1மக்களின் துயரத்தைவிட ஐ.பி.எல் போட்டி முக்கியமல்ல. எனவே ஐ.பி.எல் போட்டியை மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்றும், ஏப்ரல் 30ஆம் தேதிக்கு பின்னர் வேறு எந்த போட்டியும் மகாராஷ்டிராவில் நடத்த கூடாது என்றும் மும்பை ஐகோர்ட் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இதனால் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் கடும் குடிநீர் பஞ்சம் நிலவி வருவதால் பொதுமக்கள் குடிக்க தண்ணீர் இல்லாமல் கஷ்டப்பட்டு வருகின்றனர். பலர் இதனால் உயிரிழந்து வரும் நிலையில் ஐ.பி.எல் போட்டிக்காக லட்சக்கணக்கான லிட்டர் தண்ணீரை வீணாக்குவது எந்த விதத்தில் நியாயம் என்று பொதுநல மனு ஒன்று மும்பை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை நேற்று நடந்தபோது, ‘கழிநீரை சுத்திகரித்துதான் ஐ.பி.எல் போட்டிக்கு பயன்படுத்துவதாக பிசிசிஐ கூறியதை மும்பை ஐகோர்ட் ஏற்றுக்கொள்ளவில்லை. மகாராஷ்டிராவின் சில மாவட்டங்களில் கழிவறைப் பயன்பாட்டுக்குக் கூட தண்ணீர் இல்லாத நிலையில், ஐபிஎல் போட்டிக்காக சுத்திகரித்துப் பயன்படுத்தும் கழிவுநீரை அந்த மக்களுக்கு வழங்குவதுதான் சரியானதாக இருக்கும்.

மாநிலத்தின் மோசமான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு பிசிசிஐ, மும்பை கிரிக்கெட் சங்கம் உள்ளிட்டவை தாங்களாகவே ஐபிஎல் போட்டிகளை வேறு இடத்துக்கு மாற்றிக் கொள்ள முன் வந்திருக்க வேண்டும். துரதிருஷ்டவசமாக அவ்வாறு நடக்கவில்லை. எனவே, ஐபிஎல் போட்டியை வேறு இடத்துக்கு மாற்றுங்கள் என்று உத்தரவிடுவதைத் தவிர நீதிமன்றத்துக்கு வேறு வழியில்லை. ஏப்ரல் 30-ஆம் தேதிக்குப் பிறகு மகாராஷ்டிரத்தில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள அனைத்து போட்டிகளையும் வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும். இதற்காக ஐபிஎல் நிர்வாகத்துக்கு 15 நாள் கால அவகாசம் வழங்கப்படுகிறது. இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்த உத்தரவு காரணமாக இறுதிப்போட்டி உள்பட பல போட்டிகளை இடமாற்றம் செய்ய வேண்டிய கட்டாயத்தில் பிசிசிஐ உள்ளது.

Leave a Reply