ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில் நேற்று நடைபெற்ற முதலாவது போட்டியில் ராஜஸ்தான் அணி கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்றதை அடுத்து நேற்று நடைபெற்ற மற்றொரு போட்டியில் பஞ்சாப் அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் மும்பையை தோற்கடித்தது.
டாஸ் வென்று முதலில் பீல்டிங் செய்ய தீர்மானித்த மும்பை அணி கேப்டன் ரோஹித் சர்மா, முதலில் பஞ்சாப் அணியை பேட்டிங் செய்யுமாறு கேட்டுக்கொண்டார். சேவாக் மற்றும் முரளி விஜய் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கி நல்ல தொடக்கத்தை கொடுத்தனர். சேவாக் 35 ரன்களும், முரளி விஜய் 36 ரன்களும் எடுத்த நிலையில் தங்கள் விக்கெட்டை பறிகொடுத்த நிலையில் அடுத்து களமிறங்கிய கேப்டன் பெய்லே தனது அதிரடி ஆட்டம் காரணமாக 32 பந்துகளில் 61 ரன்கள் எடுத்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஐந்து விக்கெட்டை இழந்து 177 ரன்கள் எடுத்தது.
178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா ஆட்டத்தின் இரண்டாவது பந்திலேயே அவுட் ஆனது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது. அதன் பின்னர் களமிறங்கிய பின்ச், மற்றும் டாரே ஆகியோர்களும் ரன்கள் சேர்க்க தவறியதோடு அடுத்தடுத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்தனர். இருப்பினும் மும்பை அணிக்கு நம்பிக்கை கொடுக்கும் விதமாக ஹர்பஜன்சிங் நேற்று தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 24 பந்துகளில் 64 ரன்கள் குவித்த நிலையில் ஆட்டமிழந்ததால் மும்பை அணியின் தோல்வி உறுதியானது. இறுதியில் மும்பை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 159 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.