மாட்டிறைச்சி பிரச்சனையை மதப்பிரச்சனையாக மாற்ற வேண்டாம்.
மாடுகள் அழிந்தால் விவசாயம் அழிந்துவிடும் என்பதற்காகவே மாடுகளை இறைச்சிக்காக கொல்ல தடை செய்யப்பட்டிருப்பதாகவும், மாட்டிறைச்சி தடையை மதப்பிரச்சனையாக மாற்ற வேண்டாம் என்றும் பாஜக தேசியப் பொதுச்செயலாளரும், தமிழகப் பொறுப்பாளருமான பி.முரளிதர ராவ் கூறியுள்ளார்.
விரைவில் வரவுள்ள சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு 234 தொகுதிகளுக்கும் பாஜக பொறுப்பாளர்களை நியமனம் செய்துள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்களில் உள்ள பேரவைத் தொகுதி பொறுப்பாளர்களுக்கு நேற்று ஒருநடைபெற்றது. இக்கூட்டத்துக்கு பிறகு முரளிதரராவ் நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பணிகளை ஏற்கெனவே தொடங்கி விட்டோம். 234 தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்கள் நியமித்து வாக்குச்சாவடி குழுக்களை அமைத்து வருகிறோம். கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் அறிவிப்போம். தற்போது கட்சியை பலப்படுத்துவதுதான் எங்கள் நோக்கம்.
வளர்ச்சி, ஊழல் எதிர்ப்பு ஆகியவற்றை முன்னிறுத்தி தேர்தலை எதிர்கொள்வோம். பிஹார் மாநில சட்டப் பேரவைத் தேர்தல் முடிந்ததும் பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா மற்றும் மேலிடத் தலைவர்கள் தமிழகத்தில் சுற்றுப்பயணம் செய்வார்கள்.
மாட்டிறைச்சி பிரச்சினையை பாஜகவுக்கு எதிராக மதப்பிரச்சினையாக்கும் முயற்சியில் சிலர் ஈடுபட்டுள்ளனர். உத்தரப்பிரதேசத்தில் மாட்டிறைச்சி சாப்பிட்டதால் ஒருவர் கொல்லப்பட்டுள்ளது கடும் கண்டனத்துக்குரியது. மாடுகள் அழிந்தால் விவசாயம் அழிந்துவிடும். எனவே, மாடுகள் கொல்லப்படுவதை எதிர்க்கிறோம்
இவ்வாறு முரளிதர ராவ் கூறியுள்ளார்.