20 தமிழர்களை சுட்டுக் கொன்ற ஆந்திர போலீசார் மீது கொலை வழக்கு பதிவு.

andhra policeஆந்திர மாநிலத்தில் கடந்த வாரம் 20 அப்பாவி தமிழக தொழிலாளர்களை சுட்டுக்கொன்ற காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஆந்திர அரசு ஐதராபாத் ஐகோர்ட்டில் தெரிவித்துள்ளது.

செம்மரம் வெட்டச்சென்றதாக குற்றம் சாட்டப்பட்ட தமிழக தொழிலாளர்கள் 20 பேரை ஆந்திர மாநிலம், திருப்பதி வனப்பகுதியில் ஆந்திர சிறப்பு அதிரடிப்படை ஈவு இரக்கமின்றி சுட்டுக் கொன்றது. இதனால் தமிழகத்தில் பெரும் பதட்டம் ஏற்பட்டது. தமிழக அரசியல் கட்சிகள் இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்ததோடு ஆந்திர போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வந்தனர். தமிழகத்தில் பல்வேறு அமைப்புகள் சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வரும் நிலையில் நேற்று புதுச்சேரியில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது.

இந்நிலையில், திருப்பதி வனப்பகுதியில் துப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட ஆந்திர மாநில சிறப்பு அதிரடிப்படை காவல்துறையினர் மீது, இந்திய அரசியல் சட்டம் 302 (கொலை), 364 (கடத்தல் அல்லது கொலை செய்வதற்காக கடத்தல்), 34 (பொதுவான உள்நோக்கத்துடன் பல்வேறு நபர்கள் கூட்டாகச் செயல்படுதல்) ஆகிய பிரிவுகளின் கீழ், ஆந்திர போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளதாகவும் பெயர்கள் குறிப்பிடப்படாத, ஆந்திர மாநில சிறப்பு அதிரடிப்படை போலீஸார் மீது இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் ஆந்திர அரசு வழக்கறிஞர் ஐதராபாத் ஐகோர்ட்டில் தெரிவித்துள்ளார்.

இதன்மூலம் துப்பாக்கி சூடு நடத்திய சிறப்பு அதிரடிப்படை காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்பது உறுதியாகியுள்ளது.

Leave a Reply