முருகப்பெருமானை பூஜித்து ஆசி பெற்றிட்டால் கிடைக்கும் பலன் ?

11099722_885973261481558_6025964632748931178_n

சித்தர்கோன் அகத்திய மகரிஷியின் ஆசியை பெறுவதோடு அவர் வழிவந்த ஞானவர்க்கத்தில் தோன்றிய நவகோடி சித்தரிஷி கணங்களின் ஆசியையும் பெறுவதோடு ஞானியாகுவதற்கான வாய்ப்பையும் பெறலாம்.

ஞானியாவதற்கு மூலகாரணமாக விளங்கி நிற்பவன் ஆதி ஞானத்தலைவன் முருகப்பெருமானே என்றும், அவனே அறம், பொருள், இன்பம், வீடுபேறு ஆகிய நான்கிற்கும் தலைவன் என்பதையும், அறம் பொருள் இன்பம் வீடு பேறு ஆகிய நான்கையும் அறிந்து கொள்ளவும், அதை அறிந்து கடைப்பிடிக்கவும், கடைப்பிடித்து ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ளவும், முருகப்பெருமானே மூலகாரணமாய் விளங்கி அருள் செய்ய வல்லவன் என்பதையும் அறியலாம்.

முருகப்பெருமான் ஆசியினை பெற்று அறம் பொருள் இன்பம் வீடு பேறு ஆகிய நான்கையும் கைவரப் பெறுவதற்கு அந்தமுருகப்பெருமானே ஆசி வழங்கினாலன்றி முடியாது என்பதையும் அறியலாம். முருகப்பெருமானின் ஆசிகளை பெற விரும்புகின்றோரெல்லாம் முருகப்பெருமான் வகுத்த நெறிகளை உறுதிபட கடைப்பிடித்தாலன்றி ஆசி பெற முடியாது என்பதையும் ஜீவதயவே வடிவான முருகனின் தயவை பெற வேண்டுமாயின், முதலில் உயிர்க்கொலை செய்து புலால் உண்கின்ற கொலை பாதக செயல் செய்வதை நிறுத்திட வேண்டும்.

உயிர்க்கொலை தவிர்த்து புலால் மறுத்து சுத்த சைவ உணவை வைராக்கியத்துடன் ஏற்று ஒரு போதும் புலால் உண்ணாத மாண்பைப் பெற வேண்டும்.

தினம்தினம் தவறாமல் காலை பத்து நிமிடமும் மாலை பத்து நிமிடமும் இரவு பத்து நிமிடமும் “ஓம் முருகப்பெருமான் திருவடிகள் போற்றி” என்றோ, “ஓம் முருகா” என்றோ, “ஓம் சரவண பவ” என்றோ “ஓம் சரவண ஜோதியே நமோ நம” என்றோ தவறாது மனம் உருகி பூஜைகள் செய்திட வேண்டும்.

அவரவரும் ஜீவதயவின் வடிவான முருகனின் ஆசியை பெற வேண்டுமாயின் ஜீவதயவினை பெருக்கிட குறைந்தது மாதம் ஒருவருக்கேனும் பசித்த ஏழைகளுக்கு பசியாற்றுவித்து ஜீவதயவை பெருக்கிட வேண்டும்.

இவ்விதமே உயிர்க்கொலை தவிர்த்தும், பூஜைகள் செய்தும், பசித்த ஏழைகளுக்கு பசியாற்றுவித்தும் தொடர்ந்து செயல்பட செயல்பட ஜீவதயவின் தலைவன் நம்முள் தோன்றி நம்மை வழி நடத்திட ஞானியர் துணைகளோடு நாமும் ஞானவர்க்கத்தில் ஒருவராக இணைந்திடலாம்.

Leave a Reply