இந்து மதத்தின் புனித நூலான பகவத் கீதையை அடிப்படையாகக் கொண்ட போட்டி ஒன்றில் இஸ்லாமிய மாணவி ஒருவர் முதலிடத்தை வென்று சாதனை படைத்துள்ளார். அவருக்கு நாடு முழுவதிலும் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
மும்பையைச் சேர்ந்த மரியம் ஆசிப் சித்திகு என்ற 6 ஆம் வகுப்பு மாணவி தான் படிக்கும் பள்ளியில் நடைபெற்ற கீதை சேம்பியன் லீக் போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசை தட்டி சென்றுள்ளார். ஒரு இஸ்லாமிய சிறுமி கீதை போட்டியில் முதல் பரிசை வென்றது அனைவரையும் ஆச்சரியம் அடைய வைத்து உள்ளது.
மும்பையில் கிருஷ்ணா சர்வதேச சங்கமான இஸ்கான், கீதை சேம்பியன் லீக் போட்டியை சமீபத்தில் நடத்தியது. பகவத் கீதை குறித்து எழுத்து தேர்வு மூலம் போட்டி நடத்தப்பட்டது. இதில் 195 பள்ளிகளைச் சேர்ந்த 4 ஆயிரத்து 617 பேர் பேர் கலந்து கொண்டனர். இதில் மும்பை மீரா ரோடு காஸ்மோபாலிட்டன் பள்ளியைச் சேர்ந்த மரியம் ஆசிப் சித்திகு என்ற முஸ்லீம் மாணவி முதல்பரிசு பெற்றார். இவர் கிறிஸ்துவர்களின் புனித நூலான பைபிளையும் படித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. குரான், பகவத் கீதை, பைபிள் ஆகிய மூன்று மதங்களின் புனித நூலையும் படித்து தான் ஒரு மதச்சார்பற்ற மாணவி என்பதை அவர் நிரூபித்துள்ளார்.
இது தொடர்பாக மரியம் ஆசிப் சித்திகு கூறும்போது, ‘எனக்கு எப்போதும் மதங்கள் குறித்த ஆர்வம் இருக்கும் . அடிக்கடி மத சம்பந்தமான புத்தகங்களை ஓய்வு நேரத்தில் படித்து வந்தேன். இந்த போட்டி குறித்து எனது ஆசிரியர் என்னிடம் தெரிவித்தார். புத்தகத்தில் படித்ததை புரிந்து கொள்ள இது ஒரு நல்ல வாய்ப்பாக நான் கருதினேன். இந்த போட்டியில் கலந்து கொள்ள எனது பெற்றோரும் ஆதரவும் ஊக்கமும் அளித்தனர்’ என்றார்.
மாணவியின் தந்தை ஆசிப் சித்திகு கூறும் போது,” எங்கள் குடும்பம் மரியாதையான குடும்பம் நாங்கள் அனைத்து மதத்தையும் ஏற்று கொள்வோம் எங்களிடம் எந்த மத வெறுப்போ தவறான உபதேசமோ கிடையாது ” என்று கூறினார்.