இந்தியாவில் முஸ்லீம்களின் மக்கள் தொகை அதிகரித்துள்ளதா? புள்ளிவிபரம் கூறும் உண்மை
இந்தியாவில் முஸ்லீம் மக்கள் தொகை அதிகரித்து வருவதாக ஆர்.எஸ்.எஸ். தரப்பில் கூறப்பட்டு வரும் நிலையில், முஸ்லிம் மக்கள் தொகை வளர்ச்சிவிகிதம் இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத அளவு குறைந்திருப்பதாக புதிய சென்சஸ் புள்ளிவிபரம் உறுதிப்படுத்தியுள்ளது. குறிப்பாக கடந்த 10 ஆண்டுகளில் முஸ்லிம் மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் பெருமளவு வீழ்ச்சி அடைந்திருப்பதாக கூறப்படுகிறது.
2011ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி மதவாரியான மக்கள்தொகை புள்ளிவிபரத்தை மக்கள்தொகை ஆணையர் மற்றும் பதிவாளர் சமீபத்தில் வெளியிட்டார். அதன்படி, இந்தியாவில் தற்போது 966.3 மில்லியன் இந்துக்களும், 172.2 மில்லியன் முஸ்லிம்களும் உள்ளனர். முஸ்லீம்களின் மக்கள் தொகை மொத்த மக்கள்தொகையில் 14.23% என்பது குறிப்பிடத்தக்கது. முஸ்லீம்கள் தவிர கிறிஸ்தவர்கள் மக்கள்தொகை 2.3% ஆகவும், சீக்கியர்கள் மக்கள்தொகை 2.16% ஆகவும் இந்தியாவில் உள்ளது.
இந்திய சுதந்திரத்துக்குப் பின்னர், முஸ்லிம் மக்கள்தொகையின் வளர்ச்சி விகிதம் தொடர்ந்து ஏறுமுகத்திலேயே இருந்து வந்த நிலையில் 2001-2011 காலகட்டத்தில் முஸ்லீம்களின் வளர்ச்சி விகிதம் அதிகளவு வீழ்ச்சி அடைந்துள்ளதாக புள்ளிவிபரங்கள் கூறுகின்றன. 1991-2001 காலகட்டத்தில் முஸ்லீம்களின் வளர்ச்சி விகிதம் 29.52% ஆக இருந்ததாகவும், ஆனால் 2001-2011 காலகட்டத்தில் முஸ்லீம்களின் வளர்ச்சி விகிதம் 24.6% ஆக குறைந்துள்ளதாகவும் புள்ளிவிபரங்கள் கூறுகின்றன.
இந்தியாவிலேயே அசாம் மாநிலத்தில் அதிகளவில் முஸ்லிம்கள் இருக்கின்றனர். அங்கு முஸ்லிம் மக்கள் விகிதாச்சாரம் (34.22%). அசாமை தொடர்ந்து உத்தராகண்ட், கேரளாவில் முஸ்லிம் மக்கள் அதிகமாக உள்ளனர்.