இஸ்லாமிய பெண்ணுக்கு பிறந்த விநாயகர். மும்பையில் பரபரப்பு
சமீபகாலமாக இந்தியாவின் பல பகுதிகளில் இந்து மற்றும் முஸ்லீம்களுக்கு இடையே பதட்டமான சூழ்நிலை இருந்து வரும் நிலையில் முஸ்லீம் பெண் ஒருவர் தான் பெற்றெடுத்த ஆண் குழந்தைக்கு கணேஷ் என்று பெயரிட்டு இந்து-முஸ்லீம் ஒற்றுமைக்கு பிள்ளையார் சுழி போட்டுள்ளார்.
மும்பையை சேர்ந்த இலியாஸ் ஷேக் என்பவரின் மனைவி நூர்ஜஹான் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். இவருக்கு சமீபத்தில் திடீரென பிரசவ வலி ஏற்பட்டதால் உடனடியாக இவரது கணவர் டாக்சி மூலம் மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். ஆனால் வழியில் குறுகலான சந்துகள் இருந்ததால் டாக்சி டிரைவரால் வேகமாக வண்டியை ஓட்ட முடியவில்லை. நூர்ஜஹான் வலியால் துடித்து கொண்டிருந்தார். எந்த நேரமும் குழந்தை பிறந்துவிடும் நிலை இருந்ததால் அதிர்ச்சியான டாக்சி டிரைவர் அவர்கள் நடுவழியில் இறக்கிவிட்டு சென்றுவிட்டார்.
இந்நிலையில் வேறு டாக்சியை பிடிக்க ஷேக் சென்றிருந்த நேரத்தில் நூர்ஜஹான் பிரசவ வலியால் கதறியுள்ளார். உடனடியாக அப்பகுதியில் இருந்த பெண்கள் அருகில் உள்ள விநாயகர் கோவிலுக்கு அழைத்து சென்று அவருக்கு பிரசவம் பார்த்தனர். நூர்ஜஹானுக்கு அழகிய ஆண்குழந்தை பிறந்தது.
இதுகுறித்து நூர்ஜஹான் கூறியபோது, ‘நான், ‘நடுரோட்டிலேயே குழந்தையை பெற்றெடுத்து விடுவேனோ’ என்று பயந்துவிட்டேன். ஆனால் அருகில் இருந்து விநாயகர் கோயிலை கண்டவுடன், கடவுளே என்னுடன் இருப்பதை உணர்ந்து தைரியமானேன்” என்று கூறினார்
“நாங்கள் என்ன செய்வதென்று புரியாமல் நடுரோட்டில் நின்று கொண்டிருந்த போதுதான், நான் அருகில் இருந்த விநாயகர் கோயிலை கண்டேன். நாங்கள் கோயில் அருகில் சென்ற போது, நாங்கள் அழைக்காமலே, அங்கிருந்த பெண்கள் ஓடி வந்து எங்களுக்கு உதவினர்” என்றார் குழந்தையின் தந்தை இலியாஸ். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.