குட்டை பாவாடை, லெக்கின்ஸ் அணிய மாணவிகளுக்கு தடை. கேரள கல்லூரி நிர்வாகம் அதிரடி
கேரள மாநிலத்தில் உள்ள முஸ்லிம் பெண்கள் கல்லூரி ஒன்று இந்த கல்வியாண்டு முதல் மாணவிகள் அனைவரும் ஜீன்ஸ், குட்டை மேலாடை போன்ற உடைகளை அணிய தடை விதித்துள்ளது. இதனால் மாணவிகள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கேரளாவில் உள்ள கோழிக்கோடு நடக்காவு என்ற பகுதியில், முஸ்லிம் கல்வி நிறுவனம் சார்பில் பெண்கள் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரிக்கு வரும் முதலாமாண்டு மாணவிகள் டைட்டான ஜீன்ஸ், குட்டையான மேலாடை, லெக்கின்ஸ் மற்றும் குட்டை பாவாடை ஆகிய உடைகளை அணிய இவ்வாண்டு முதல் தடை விதிக்கப்பட்டு உள்ளது.
மாணவிகள் அனைவரும் டீசண்டான சல்வார், சுடிதார் பாட்டம் மற்றும் ஓவர்கோட் போன்ற உடைகளை மட்டுமே அணிந்துவர வேண்டும் என்றும் முஸ்லிம் மாணவிகள் தலையில் பர்தா அணிந்து வரவேண்டும் என்றும் கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து கல்லூரி முதல்வர் சீதாலட்சுமி கூறியதாவது: “மாணவிகள் சிலர் இறுக்கமான ஜீன்ஸ், குட்டை மேலாடை மற்றும் லெக்கின்ஸ் அணிந்து கல்லூரிக்கு வருகின்றனர். இதனை அனுமதிக்க முடியாது. அவற்றை தடுக்கும் வகையில், ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதற்கு சீனியர் மாணவிகள் ஒத்துழைப்பு தரவேண்டும். சல்வாரின் மீது அணியும் ஷாலை, ஓவர்கோட் மீது அணிந்து கொள்ளலாம். இதனால் 50 சதவீத மாணவியர், ஒரே மாதிரியான உடையமைப்பில் வரும் வாய்ப்பு உள்ளது. இந்த புதிய நடைமுறைக்கு மாணவிகளின் பெற்றோர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்” என்று கூறியுள்ளார்.
இந்த புதிய நடைமுறைக்கு மாணவிகளின் பெற்றோர்கள் மத்தியில் வரவேற்பு இருந்தாலும் மாணவிகள் மத்தியில் பெரும் அதிருப்தி காணப்படுவதாக கூறப்படுகிறது. எந்த வகை உடை அணியவேண்டும் என்பதில் தங்களுக்குரிய சுதந்திரத்தை கல்லூரி நிர்வாகம் பறிப்பதாக பெயர் குறிப்பிட விரும்பாத சில மாணவிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.