மாட்டிறைச்சி சாப்பிடும் கோவா கிறிஸ்துவர்களை எங்கே அனுப்புவீர்கள்? காஷ்மீர் முதல்வர் கேள்வி
மாட்டிறைச்சி சாப்பிடுவது குறித்த சர்ச்சை இந்தியாவின் பல மாநிலங்களில் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில் ஜம்முகாஷ்மீர் முதலமைச்சரும் இதுகுறித்து தனது கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளார். மாட்டிறைச்சி சாப்பிடும் முஸ்லிம்களுக்கு இந்தியாவில் இடமில்லை என்று கூறி வரும் நிலையில் அதே மாட்டிறைச்சியை சாப்பிடும் கோவா கிறிஸ்தவர்களை எங்கே அனுப்புவார்கள்? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு சமீபத்தில் பேட்டியளித்துள்ள அரியானா மாநில முதல் மந்திரி மனோகர் லால் கட்டார், முஸ்லிம்கள் இந்தியாவில் இருக்க விரும்பினால் மாட்டிறைச்சி சாப்பிடுவதை அவர்கள் கைவிட வேண்டும் என்று தெரிவித்திருந்தார். இவரது கருத்து நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை கிளப்பியுள நிலையில், ஜம்மு-காஷ்மீர் மாநில முதல் மந்திரி உமர் அப்துல்லா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, தனது டுவிட்டர் பக்கத்தில் இன்று அவர் கூறியிருப்பதாவது, ‘நாங்கள் (முஸ்லிம்கள்) பாகிஸ்தானுக்கு டிக்கெட் எடுத்துக் கொள்கிறோம். ஆனால், கோவாவில் வாழும் கிறிஸ்தவர்களை எங்கே அனுப்புவீர்கள்?’ என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதேபோல், பிரபல அரசியல் விமர்சகரும், கட்டுரையாளருமான சேகர் குப்தாவும் தனது டுவிட்டரில். ‘கோவாவில் உள்ள கிறிஸ்தவர்களும் இந்தியாவில் வாழ வேண்டுமானால், மாட்டிறைச்சி உண்ணும் பழக்கத்தை அவர்கள் கைவிட வேண்டும் என உத்தரவிடும்படி, கோவாவை ஆட்சிசெய்யும் பா.ஜ.க. முதல் மந்திரியை யாராவது கேட்டுக் கொள்வீர்களா? என கேள்வி எழுப்பியுள்ளார். இந்த கருத்துக்கு பதில் கருத்து பதிவிட்டுள்ள உமர் அப்துல்லா, ‘நல்ல கேள்வி, இதற்கு பதில் அளிக்க யாருமே முன்வர மாட்டார்கள் என பந்தயம் கட்டிக் கொள்ளலாம்’ என குறிப்பிட்டுள்ளார்.
உமர் அப்துல்லா, சேகர் குப்தா ஆகியோர்களுக்கு பாஜக தலைவர்கள் என்ன பதில் சொல்ல போகின்றனர் என்பதை ஊடகங்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றன