‘முத்துக்கிருஷ்ணன் மன அழுத்தத்தில் இருந்தார்’ : டெல்லி காவல்துறை விளக்கம்
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர் முத்துக்கிருஷ்ணன் நேற்று இரவு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது,. ஆனால் அவருடைய பெற்றோர் இது தற்கொலையாக இருக்க வாய்ப்பே இல்லை என்று கூறுகின்றனர்.
இந்நிலையில் தற்கொலை செய்த மாணவர் முத்துகிருஷ்ணனின் உடல், டெல்லி ஜே.என்.யூ. பல்கலைக்கழக விடுதி வளாகத்தில் இருந்து நேற்று மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்நிலையில், இதுகுறித்து டெல்லி காவல்துறைத் துணை ஆணையர் ஈஷ்வர் சிங் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ‘முத்துக்கிருஷ்ணன் மன அழுத்தத்தில் இருந்துள்ளார். அவரது செல்போன் அழைப்புகள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. அவர் தூக்கில் தொங்கியதை மணிப்பூர் மாணவர்தான் முதலில் பார்த்துள்ளார். அவர் தற்கொலை செய்துகொண்டதற்கான காரணம் தெரியவில்லை. அவரது அறையில் தற்கொலைக்கான கடிதம் எதுவும் இல்லை.
மேலும் மாணவர்களின் நண்பர்களிடமும் தீவிர விசாரணை செய்யப்பட்டு வருகிறது. அவரது பெற்றோர்களிடமும் விசாரணை செய்ய முடிவெடுத்துள்ளோம்’ என்று கூறியுள்ளார்.