நான் செய்த மிகப்பெரிய தவறு. ஹிலாரி கிளிண்டன் குறிப்பிடுவது எதை?
ஈராக் நாட்டில் கடந்த 2003ஆம் ஆண்டு முதல் 2011ஆம் ஆண்டு வரை அமெரிக்கா தலைமையிலான நாடுகள் நடத்திய போரில் சுமார் 25 ஆயிரம் பேர் மரணம் அடைந்தனர். மேலும் 1 லட்சத்துக்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர். இந்த போரில் அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, போலாந்து நாடுகளை சேர்ந்த சுமார் மூன்று லட்சம் படைவீரர்களும், ஈராக் ராணுவத்தை சேர்ந்த மூன்று லட்சத்துக்கும் அதிகமான படைவீரர்களும் ஈடுபட்டனர்.
இந்த போரை நடத்துவதற்கு அப்போதைய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் டபிள்யூ புஷ் அவர்களுக்கு அதிகாரம் அளித்து பாராளுமன்றத்தில் வாக்களித்ததை தனது பெரிய தவறாக தான் கருதுவதாக அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளராக போட்டியிடவுள்ள ஹிலாரி கிளிண்டன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் பிரபல செய்தி தொலைக்காட்சிக்கு ஒன்றுக்கு பேட்டி ஒன்றில் ஹிலாரி கிளிண்டன் கூறியதாவது: “ஈராக்குக்கு எதிராக போர் நடத்துவதற்கு அந்நாள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் டபிள்யூ புஷ்ஷுக்கு அதிகாரம் அளித்து வாக்களித்ததை எனது தவறாக கருதுகிறேன். ஜார்ஜ் புஷ் நினைத்ததற்கு மாறாக அந்த நடவடிக்கை அமைந்து விட்டது. அதற்காக நான் வருந்துகிறேன். எதிர்பார்த்ததற்கு எதிர்மறையாக அந்தப் போரின் விளைவு திரும்பி விட்டது’ என்று கூறினார்.