காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் முகமூடியை கிழிக்க இன்னொரு புத்தகம் எழுதுவேன் என முன்னாள் காங்கிரஸ் அமைச்சர் நட்வர்சிங் அறிவித்துள்ளதால் டெல்லி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
கடந்த காங்கிரஸ் கட்சி ஆட்சியின்போது வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த நட்வர்சிங் சமீபத்தில் எழுதி வெளியிட்ட தனது சுயசரிதை புத்தகத்தில், சோனியா காந்தி குறித்து சில சர்ச்சைக்குரிய கருத்துக்களையும், ராகுல்காந்தி இலங்கை பிரச்சனையை கையாண்ட விதம் குறித்தும் குறிப்பிட்டிருந்தார். இதனால் கடும் கோபம் அடைந்த சோனியா காந்தி இதற்கு தனது சுயசரிதையில் பதிலளிப்பதாக கூறியிருந்தார்.
இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தொடர்பான தகவல்களை இந்த முதல் புத்தகத்தில் தான் கூறியது ஒரு சிறிய அளவுதான் என்றும், இன்னும் அவரை பற்றிய ரகசியங்கள் தன்னிடம் உள்ளது என்றும் அதை தனது அடுத்த புத்தகத்தில் வெளிப்படுத்தி சோனியாவின் முகமூடியை கிழிக்காமல் விடமாட்டேன் என்றும் நட்வர்சிங் கூறியுள்ளார்.
மேலும் தான் எழுதிய சுயசரிதை புத்தகம் 4 நாட்களில் சுமார் 50 ஆயிரம் பிரதிகள் விற்பனையாகியுள்ளதாகவும், இந்த விற்பனை தான் எதிர்பார்த்ததை விட பலமடங்கு அதிகமாக இருந்ததாகவும், இந்த விற்பனைக்கு உதவிய சோனியா காந்தி உள்பட அனைத்து காங்கிரஸ் கட்சியினருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார்.
தனது அடுத்த புத்தகம் ‘மை இர்ரெகுலர் டயரி’ என்ற பெயரில் வெளியாகவுள்ளதாகவும், அந்த புத்தகம் முதல் புத்தகத்தைவிட பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் என்றும் அவர் கூறியுள்ளதால் காங்கிரஸ் தலைமை கடும் அதிர்ச்சி அடைந்துள்ளது.