நமது கல்வியின் மிகப் பெரிய கதறல் குழந்தைகளுடைய கட்டாய மவுனத்தின் வழியாகப் பீறிட்டு நம் காதுகளைத் துளைக்கிறது.
– பேராசிரியர் யஷ்பால்
இன்றைய உலகில் கல்வியாளர்கள் உணர்ச்சிபூர்வமான நுண்ணறிவுத்திறன் (Emotional Intelligence) பற்றி கவனம் செலுத்துகிறார்கள். நமது கல்வியிலோ உணர்வுகளுக்கு இடமில்லை. விருப்புவெறுப்புக்கோ, மன எழுச்சிக்கோ, உணர்ச்சிபூர்வமான ஈர்ப்புக்கோ இடமில்லை.
ஆசிரியரும் நடிகரும்
சமீபத்தில் வெள்ளத்தின் பாதிப்பால் சென்னையின் பள்ளிகள் அசுத்தமடைந்தன. அவற்றைத் தூய்மைப்படுத்தித் தருவதற்குச் சென்ற தன்னார்வலர்களை ஒரு விஷயம் திகைக்கவைத்தது. உட்காரும் பெஞ்சு முதல் பள்ளியின் வெளிச்சுவர் வரையிலும் பள்ளிக் குழந்தைகள் தங்களின் அபிமான நடிகர்களின் பெயர்களையும் திரைப்படத் தலைப்புகளையும் எழுதி வைத்திருந்தனர்.
கல்வியில் வெளிப்படுத்த முடியாத உணர்ச்சியை வேறு வகையில் வெளிப்படுத்தும் ஒருவகையான வடிகால் மனப்பான்மை இது. அன்றாடம் வகுப்பில் சந்திக்கும் ஒரு ஆசிரியரைவிட எப்போதாவது ஒருமுறை திரையில் வரும் ஒரு நடிகரால் மாணவர்களின் உணர்வுகளைத் தூண்ட முடிகிறது என்பதை இது காட்டுகிறது.
அடக்கப்படுதலும் வெடித்து எழுவதும்
“கத்தக் கூடாது. சப்தம் போட்டு சிரிக்கக் கூடாது. கைதட்டி ரசிக்கக் கூடாது” எனும் “கூடாது கூடாது”களின் பட்டியல்தான் வகுப்பறை நடத்தை விதிகள். குழந்தைகள் தங்களின் உணர்வுகளை அடக்கிக்கொண்டு பாடப் புத்தகத்தின் மொழியை உள்வாங்க வேண்டும் என்று நமது கல்விமுறை முரட்டுத்தனமாய் இருக்கிறது. இதனால் உணர்ச்சிபூர்வமாய் எழுச்சிபெற வேண்டிய நாட்டுப்பற்று, தாய்மண் மீதான ஈர்ப்பு, தாய்மொழி உணர்வு, குற்றங்களுக்கு எதிராகச் செயல்படுதல் என எல்லாமே முடங்கிவிடுகின்றன.
உணர்ச்சிபூர்வமான நுண்ணறிவுத்திறன் கல்வியில் எப்படிப் பங்காற்ற முடியும் என்று எனக்குக்காட்டியவர் மாணவர் விக்ரம்.
உணர்வுபூர்வமான அறிவுக்கூர்மை எனும் புதிய புரிதலுக்கு வித்திட்டவர் ஆங்கில உளவியல் அறிஞர் டேனியல் கோல்மன். நுண்ணறிவு ஈவு (Intelligence Quotient) போலவே உணர்வுநிலை ஈவு (Emotional Quotient) என்பதும் கல்வியில் முக்கியம் என்பதை அவர் நிறுவினார். மனக்கிளர்ச்சியை நெறிப்படுத்துவதே கல்வியின் பிரதான நோக்கம் என்பது கோல்மனின் கருத்து.
கட்டுப்படுத்தி வைக்கப்படும் இயல்பான உணர்வெழுச்சி, வாய்ப்பு கிடைக்கும்போது கட்டுப்பாடு இல்லாத வெறித்தனமான செயல்பாடாக ஊக்கம் பெறுகிறது. எதிர்பாலினத்தவரிடம் பேசக் கூடாது. ஆத்திரத்தை வெளிப்படுத்தக் கூடாது. வலி எடுப்பதை சப்தம் போட்டு வெளியே காட்டிக்கொள்ளக் கூடாது என்று குழந்தைகள் அடக்கப்படுகின்றன. இத்தகைய சூழ்நிலைகள் ஒரு குழந்தையை அத்தகைய கட்டுப்பாட்டுத் தன்மைக்கு எதிரானவர்களாக்கிவிடுகிறது. இவ்வாறு அடக்கப்பட்ட உணர்வுகள்தான் கல்லூரியின் கண்ணாடிகளை அடித்து நொறுக்குவது முதலாகப் பாலியல் வன்கொடுமை வரை வெடித்து வெளியாகின்றன.
உணர்ச்சி மேலாண்மை
மனக்கிளர்ச்சியை நெறிப்படுத்துவது கல்வியின் ஒரு பகுதி ஆக்கப்பட வேண்டும் என வாதிட்ட கோல்மன், தனது சொந்த உணர்வுகளைப் பரிசீலித்துக் கட்டுப்படுத்துதல், பிறரது உணர்வுகளுக்கு மதிப்பளித்துப் பரிசீலித்தல் ஆகியவை தலைமைப் பண்பை நோக்கிய கல்வியின் தன்மையாக இருக்க வேண்டுமே ஒழிய உணர்வுகளை முற்றிலுமாக ஒடுக்கிக்கொள்ள வைப்பது அல்ல என்பதை நிரூபித்தவர்.
உணர்ச்சிபூர்வமான அறிவுத்திறன் சமூகத்தையும் இணைத்துச் சிந்திக்கும் பொறுப்புணர்வை குழந்தைக்கு ஏற்படுத்தும் என்பதை கல்வியாளர்கள் விரைவில் புரிந்துகொண்டனர். மனக்கிளர்ச்சியைச் செயல்திறனாக மாற்றுதல் (Ability Model) அதையே பண்புத்திறனாக மாற்றுதல் (Traits Model) இரண்டும் கலந்த ஒன்றாய் மாற்றுதல் (Mixed Model) என்று மனக்கிளர்ச்சி நுண்ணறிவைப் பல பகுதிகளாக அறிஞர்கள் பிரித்துக் கல்வி உளவியலின் முக்கியமான பகுதியாக அவற்றை ஆக்கியிருக்கிறார்கள்.
கற்பிப்பதே ஒரு கலையாக
நமது பள்ளிகளில் குழந்தைகளின் மன உணர்வுகளை வெளிப்படுத்த மட்டுமல்ல அவற்றை ஆக்கபூர்வமான செயல்திறனாக மாற்ற வேண்டும். அதைச் செய்ய நாம் முதலில் வகுப்பறையில் ஒரு ஆசிரியர் பாடத்தைக் கற்றுக்கொடுப்பதும் மாணவர்கள் எல்லாரும் அதை வாயைப் பொத்திக்கொண்டு கேட்பதைப் போன்று உரையாற்றும் முறைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பது கல்வியாளர்களின் கருத்து.
நமது பாடப்புத்தகத்தின் மொழியை நிகழ்கலையாகவும், கருத்துப் பரிமாற்றமாகவும், உரையாடலாகவும் மாற்ற வேண்டும். வகுப்பறையில் ஆசிரியர் போதிக்கும் முறையைக் கலைத்தன்மையாக வளர்த்தெடுக்க வேண்டும். இது காலத்தின் கட்டாயம்.
குழந்தைகளின் துக்கம், மகிழ்வு, மனத்தின் தவிப்புக்கு இடம் தராத கல்வியில் உணர்ச்சிபூர்வமான ஊக்கம் எப்படிச் செயல்படும் என்பதை எனக்குப் புரிய வைத்தவர் மாணவர் விக்ரம்.
மிமிக்ரி விக்ரம்
பத்தாம் வகுப்பு மாணவராக அறிமுகம் ஆனார் விக்ரம். நான் ஒரு நாள் வகுப்பறையைக் கடந்து சென்றபோது தற்செயலாகப் பார்த்தேன். வகுப்பறையில் எல்லோரின் முன்பாக நான் பேசி பாடம் நடத்துவதுபோலவே விக்ரம் வேடிக்கையாக நடித்துக் காட்ட எல்லாரும் கொல்லென சிரித்தார்கள்.
என் மனம் நொந்தது. என் பணியின் ஆரம்ப நாட்கள் அவை. நான் அன்று முழுவதும் ஆத்திரமாகவும் பதற்றமாகவும் இருந்தேன். மாணவர் விக்ரமை அழைத்து அடித்து நொறுக்கவும் மனம் துடித்தது. ஏனோ அவ்விதம் செய்யாமல் அவர் குறித்த ஒரு எரிச்சலுணர்வுடன் வீடு சென்றேன். எந்த வேலையும் ஓடவில்லை. மனம் அந்தச் சம்பவத்தையே நினைத்தது. கைப்பையை ஆத்திரத்தோடு தூக்கி எறிந்தேன்.
அப்போது ஒரு காகிதம் வெளியே தெறித்து விழுந்தது. அது என்ன என்பதை அறிய உணர்ச்சி இல்லாமல் திறந்தேன். ‘வணக்கம். சார். நீங்கள் பாடம் நடத்தும்முறை எனக்கு மிகவும் பிடிக்கும். அதனால் உங்களை மாதிரி பேசிப் பார்ப்பேன். உங்கள் மனதை அது புண்படுத்தி இருந்தால் மன்னிச்சிடுங்க சார் விக்ரம்.’ என்று அதில் எழுதி இருந்தது.
அப்போது நான் அனுபவித்த பலவிதமான உணர்வுகளை விளக்குவது கடினம். மற்றவர்களின் உணர்வுநிலையை அறிந்துகொள்ளுதல் என்பதற்கு இதைவிட வேறு என்ன உதாரணத்தைச் சொல்ல முடியும்?
அம்மாவுக்குப் பிடித்த கணிதம்
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு வந்தது. ஆங்கிலம் இரண்டாம் தாள் பொதுத்தேர்வு. 11 மணியளவில் தேர்வு மையத்தின் பொறுப்பாளர் என்னை அழைத்தார். மாணவர் விக்ரமின் அம்மா சற்று முன்னதாக நடந்த ஒரு சாலை விபத்தில் மரணம் அடைந்துவிட்டார். அவரிடம் அதைப் பக்குவமாய் எடுத்துக் கூறி வீட்டுக்கு அனுப்ப வேண்டும். அந்தப் பொறுப்பு என்னிடம் ஒப்படைக்கப்பட்டது.
இது போன்ற தருணங்களில் ஒரு குழந்தையை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்று ஆசிரியர் பயிற்சியிலோ, பணிஇடைப் பயிற்சியிலோ எங்களுக்குச் சொல்லப்படுவது இல்லை. பலவிதமான தயக்கங்களுக்கு பிறகு நான் அவர் முன் நின்றேன். அவர் தேர்வை ஏறக்குறைய முடித்திருந்தார். அவரது வாழ்வின் ஆக மோசமான செய்தியை அவரிடம் நான் அவிழ்க்க வேண்டும். மன்னிப்புக் கேட்கும் தொனியில் ஏதேதோ பேசி அன்று அவரை அனுப்பிவைத்தேன்.
அடுத்தது கணிதத் தேர்வு. மூன்று நாட்களே இடைவெளி இருந்தது. விக்ரம் தேர்வுக்கு வர மாட்டார் என்றே எல்லோரும் நினைத்தோம். தேர்வு அவ்வளவு முக்கியமல்ல என்று நான்கூட நினைத்தேன். ஆனால் மாணவர் விக்ரம் தேர்வு எழுதியது மட்டுமல்ல, அதில் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்று எல்லாரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார். ‘‘அம்மாவுக்குப் பிடிச்ச பாடம் கணிதம் சார்’’ என்று தேர்வு முடிந்த நாளில் அவர் தேம்பி அழுதார்.
உணர்வுபூர்வமான மனநிலை ஒரு ஊக்கமாகக் கல்வியில் எப்படி செயல்பட முடியும் என்பதை அந்தச் சம்பவம் எனக்கு விளக்கியது. அதை எனக்கு உணரவைத்த விக்ரம் இப்போது பொறியியல் கல்லூரி விரிவுரையாளராக கோவையில் பணிபுரிகிறார்.
தொடர்புக்கு: eranatarasan@yahoo.com