திமுகவை ஆட்சிக்கு வரவிடாமல் செய்தது எனது ராஜதந்திரம்தான். உண்மையை ஒப்புக்கொண்ட வைகோ
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மக்கள் நலக்கூட்டணி என்ற அமைப்பை ஏற்படுத்தியபோதே பலர் இந்த அமைப்பை அதிமுகவின் ‘பி’ டீம் என்றே வர்ணித்தனர். திமுக ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என்பதற்காகவும் அதிமுகவுக்கு ஆதரவாகவும்தான் இந்த கூட்டணி ஏற்பட்டது என்று கூறப்பட்டது. இதை அவ்வபோது மக்கள் நலக்கூட்டணி தலைவர்கள் மறுத்துவந்த நிலையில் தற்போது வைகோ உண்மையை ஒப்புக்கொண்டார்.
திருச்சியில் நடைபெற்ற ம.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய வைகோ, ”என்னை ராஜதந்திரம் இல்லாதவர் என கருணாநிதி நினைத்து கொண்டிருந்தார். எனது ராஜதந்திரம் தான் தி.மு.க.வை ஆட்சிக்கு வரவிட முடியாமல் தடுத்து நிறுத்தி இருக்கிறது’ என்று கூறியுள்ளார்.
ஏற்கனவே அதிமுகவுக்கு சாதகமாக செயல்பட விஜயகாந்த் ரூ.700 கோடி பெற்றுள்ளார் என்று மக்கள் தேமுதிக தலைவர் சந்திரகுமார் குற்றஞ்சாட்டியுள்ள நிலையில், திமுகவை ஆட்சிக்கு வராமல் தடுப்பதற்கு நான் செய்த ராஜதந்திரமே காரணம் என்று வைகோ கூறி எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பதை உறுதி செய்துள்ளார்.
மொத்ததில் மக்கள் நலக்கூட்டணி என்பதே தாங்கள் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதற்காக ஆரம்பிக்கப்பட்ட கூட்டணி இல்லை என்றும் பணம் சம்பாதிக்கவும், திமுக ஆட்சி வரவிடாமல் தடுப்பதற்காகவும் ஆரம்பிக்கப்பட்ட கூட்டணி என்பதும் தற்போது உறுதியாகியுள்ளது.