ஜூன் 27-ல் மைசூர் மகாராஜா திருமணம். திருமணத்தில் கலந்து கொள்பவர்களுக்கு ஆடை கட்டுப்பாடு

ஜூன் 27-ல் மைசூர் மகாராஜா திருமணம். திருமணத்தில் கலந்து கொள்பவர்களுக்கு ஆடை கட்டுப்பாடு
mysore
மைசூரு மகாராஜா வாரிசுகளில் ஒருவரான யதுவீர் கிருஷ்ணதத்த சாமராஜ் உடையார் அவர்களுக்கு ஜூன் 27-ம் தேதி திருமணம் நடைபெற உள்ளதை அடுத்து இந்த திருமணத்திற்காக பிரமாண்டமான ஏற்பாடுகள் மைசூரு அரண்மனை வளாகத்தில் நடைபெற்று வருகிறது.

மைசூரு உடையார் சாம்ராஜ்ஜியத்தின் புதிய மகாராஜாவாக யதுவீர் கிருஷ்ணதத்த சாமராஜ் உடையார் கடந்த ஆண்டு முடிசூட்டப்பட்டார். இவ‌ருக்கும் ராஜஸ்தான் மன்னர் குடும்பத்தை சேர்ந்த திரிஷிகாகுமாரி என்பவருக்கும் திருமணம் செய்ய கடந்த 2014ஆம் ஆண்டு பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டது. இதனிடையே யதுவீர் மைசூரு மகாராஜாவாக பொறுப்பேற்றதால், திருமணம் தள்ளிப்போனது. இந்நிலையில் மைசூரு அரண்மனை நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

யதுவீர் கிருஷ்ணதத்த சாமராஜ் உடையாருக்கும் திரிஷிகாகுமாரிக்கும் வரும் 27ஆம் தேதி மைசூரு அரண்மனையில் திருமணம் நடைபெற உள்ளது. திருமணத்துக்கு 10 நாட்களுக்கு முன்பாகவே பல்வேறு பூஜைகளும், குடும்ப நிகழ்ச்சிகளும் தொடங்குகிறது. இதையடுத்து 27ஆம் தேதி மைசூரு அரண்மனையில் உள்ள‌ தர்பார் ஹாலில் திருமண வரவேற்பும், அதைத் தொடர்ந்து திருமணமும் நடைபெறுகிறது.

கர்நாடக முதல்வர், அமைச்சர்கள் உட்பட பல்வேறு முக்கியப் பிரமுகர்கள் பங்கேற்கும் இந்த திருமணத்துக்கான அழைப்பிதழ்கள் அச்சிடும் பணி முடிந்துள்ளது. இந்த அழைப்பிதழ்களை முக்கிய விருந்தினர்களுக்கு மகாராணி பிரமோதா தேவி அனுப்பி வருகிறார். இந்த திருமணத்தில் பங்கேற்கும் ஆண்கள் வெள்ளை அல்லது கறுப்பு நிற கோட், வெள்ளை பேன்ட், சிவப்பு தலைப்பாகை அணிந்திருக்க வேண்டும். இல்லாவிடில் நீல நிற கோட் சூட் அணிந்திருக்க வேண்டும். பெண்கள் புடவையும், பாரம்பரிய உடைகளையும் அணிந்து வர வேண்டும் என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply