சிங்களர்,தமிழர்களை இணைக்க முந்தைய அரசு தவறிவிட்டது. மைத்ரிபால சிறிசேனா வருத்தம்

sirisena_2300037fஇலங்கையில் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தபின், சிங்களர் மற்றும் தமிழர்களை இணைக்க நாடு தவறிவிட்டது என்று அந்நாட்டு அதிபர் மைத்ரிபால சிறிசேனா வருத்தம் தெரிவித்தார்.

இலங்கையின் 67-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தலைநகர் கொழும்புவில் நடைபெற்ற விழாவில் அவர் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்:

2009-ல் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தாலும் நாட்டின் வடக்கு மற்றும் தெற்குப் பகுதி மக்களின் (தமிழர்கள் மற்றும் சிங்களர்கள்) மனங்களை இணைக்க முந்தைய தலைவர்கள் தவறிவிட்டனர். தேசிய அளவிலான நல்லிணக்க நடவடிக்கைகள் வடக்கு – தெற்கு மக்களை இணைப்பதே நமக்கு முன்புள்ள மிகப்பெரிய சவாலான பணியாகும்.

பிரிட்டனிடம் இருந்து நாடு சுதந்திரம் பெற்றது முதல், 67 ஆண்டுகளில் என்ன தவறு நடந்தது என்பதை அரசியல் தலைவர்கள் அனைவரும் சிந்தித்துப் பார்க்க வேண்டும். 1948 முதல் நமது சாதனைகளுக்காக நாம் மகிழ்ச்சி அடைய முடியுமா?

என்றாலும் கடந்த காலத்தின் தனிப்பட்ட நபர்களின் தவறுகளை பேசுவதை விட, தவறுகள், தோல்விகளை சரிசெய்வதே முக்கியம். நாட்டை ஆளும் அனைத்து கட்சிகள் மற்றும் தலைவர்களும் எதிர்கால நலன் கருதி தங்கள் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும்.

நண்பர்களை மட்டுமே உருவாக்கும் வகையில் நாட்டின் வெளிநாட்டுக் கொள்கையை அரசு மாற்றியமைக்கும். வெளிநாட்டுக் கொள்கையில் உள்ள பிரச்சினைகளை நாம் தீர்க்க வேண்டும். ஐ.நா. சாசனத்தை நாம் பின்பற்றுவோம். ஐ.நா. கோட்பாடுகளுக்கு கட்டுப்பட்டு நடந்துகொள்வோம். இலங்கையை முன்னேற்றம் அடையச் செய்வதற்கு சர்வதேச சமூகத்தின் ஆதரவை பெறும் வகையில், நடுநிலையான வெளிநாட்டுக் கொள்கையை கடைபிடிப்போம்.

இவ்வாறு மைத்ரிபால சிறிசேனா பேசினார்.

Leave a Reply