ராணுவ முகாமில் பயிற்சி பெற்ற நாய் மணி காவல்துறையில் பணிபுரியும், சிபி இருக்கும் பக்கத்து வீட்டிற்கு இடம் தனது முதலாளியுடன் வருகிறது. நாயின் உரிமையாளர் சொந்த ஊருக்கு செல்வதால் மணியை நான்கு நாட்கள் பார்த்துக் கொள்ளுமாறு சிபியிடம் கூறுகிறார். ஆனால் சிபி மறுக்கிறார். இதனால் பக்கத்து வீட்டுக்காரர் அவரது வீட்டிலேயே மணியை கூண்டில் அடைத்து விட்டு செல்கிறார். சில சிறுவர்களால் மணிக்கு தொல்லை ஏற்பட உடனே மணியை காப்பாற்றி தனது வீட்டிற்குள் அழைத்து செல்கிறார் சிபி. இந்த சமயத்தில் திடீரென பக்கத்து வீட்டுக்காரர் இறந்துவிட, மணியை காப்பாற்றும் பொறுப்பு சிபி மேல் விழுகிறது. அவரும் மணியின் மீது பாசத்துடன் பழகுகிறார்.
இந்நிலையில் சிபியின் மனைவி அருந்ததியை ஒரு மர்ம கும்பல் கடத்துகிறது. கடத்தல் கும்பலை பற்றி விசாரிக்கும் போது, ஏற்கனவே தன்னிடம் அடிவாங்கிய கும்பல்தான் தன்னை பழிவாங்குவதற்காக மனைவியை கடத்தியுள்ளனர் என்பது சிபிக்கு தெரியவருகிறது. மனைவியை தேடி அலையும் சிபியிடம் மனைவியை விடுவிக்க வேண்டும் என்றால் பணம் கொடுக்க வேண்டும் என்று கடத்தல் கும்பலின் தலைவன் பாலாஜி மிரட்டுகிறான். பணத்தை கொடுத்து மனைவியை மீட்க கிளம்பும் சிபியுடன் மணியும் செல்கிறாது. கடத்தல் கும்பல் அருந்ததியை உயிருடன் சவப்பெட்டியில் வைத்து புதைத்துவிட்டதாக சொல்கிறார். சவப்பெட்டியில் உயிருடன் புதைக்கப்பட்ட அருந்ததி, 6 மணி நேரம் மட்டுமே உயிருடன் இருக்க முடியும் என்ற நிலையில், அந்த 6 மணி நேரத்திற்குள் தனது மனைவியை சிபி, மணி உதவியுடன் காப்பற்ற முயற்சி எடுக்கிறார். இதில் சிபி வெற்றி பெற்றாரா? இல்லையா? என்பதே மீதிக்கதை.
படத்தில் சிபிராஜ் நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரையில் வந்திருந்தாலும், அவருக்கு கொடுக்கப்பட்ட வெயிட்டான கேரக்டரை அவர் சரியாக பயன்படுத்தியுள்ளாரா என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். எந்த காட்சிக்கு என்ன ரியாக்ஷன் கொடுக்க வேண்டும் என்பதே தெரியாமல் நடித்திருக்கின்றார். இயக்குனரும் தயாரிப்பாளரின் மகன் என்பதால் கண்டிப்பாக வேலை வாங்கவில்லை என்பது தெரிகிறது. போலீஸ் வேடத்தின் மிடுக்கு இருந்தாலும் சிபிக்கு நடிப்பு சுத்தமாக வரவில்லை. சிபி இனிமேல் நடிப்பதை தவிர்த்துவிட்டு திரைக்கு பின்னால் ஏதாவது பணியை செய்யலாம்.
சிறு வேடமாக இருந்தாலும் கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார் அருந்ததி.
படத்தில் மணி என்னும் முக்கியமான கதாபாத்திரமாக நாய் நடித்துள்ளது. படத்தின் பெரும்பகுதியை ஆக்கிரமிப்பு செய்து பட்டைய கிளப்பி ரசிகர்களை ரசிக்க வைத்திருக்கிறது. மணிக்கு சிறப்பாக பயிற்சி கொடுத்தவருக்கு அதிக பாராட்டுகளை தரலாம்.
ஒருபடம் வெற்றிப் பெற வேண்டுமானால், கதை மற்றும் ஹீரோவைத் தவிர ரசிகர்களை கவரக்கூடிய வேறு ஏதாவது ஒன்று வேண்டும் என்பதை புரிந்துகொண்ட இயக்குனர் சக்தி செளந்தர் ராஜன், ஒரு நாயை மையப்படுத்தி கதையை சுவாரஸ்யமான திரைக்கதையால் நகர்த்தியுள்ளார். சிபியை நம்புவதை விட நாயை நம்புவது நல்லது என்பது அவர் நினைத்திருப்பது பல காட்சிகளில் தெரிகிறது. ஒரு நல்ல திரைக்கதையை ஒரு மோசமான நடிகரை செலக்ட் செய்து வேஸ்ட் செய்துவிட்டார்.
தரணியின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். குறிப்பாக டாக்கி டாக்கி பாடல் ஆட்டம் போட வைக்கிறது. இவரது பின்னணி இசை திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவியிருக்கிறது. நிஸார் ஷாபியின் ஒளிப்பதிவில் திரில்லர் படத்திற்குண்டான அனைத்து அம்சங்களையும் காண முடிகிறது.
நாய்க்காக ஒருமுறை பார்க்கலாம்.