நலம் காக்கும் நவபாஷாணம்

header-bhogar-navapashanam

நவபாஷாணக் கலவை என்பது 96 வகை மூலிகைச் சாறுகளை உடையது. இதனைத் தயாரிக்க 15 மாதங்களாகும். இக்கலவை நிலைக்கு வந்ததும் காற்றழுத்தத்திற்கு உட்படுத்தி திடப்பொருளாக்குவர். நவபாஷாணத்தைக் கட்டியதும் அது அணுசக்தியின் ஆற்றலைப் பெற்று விடுகிறது என்பது ஆராய்ச்சியாளர் கருத்து. இதைக் கட்டும் சாஸ்திரத்தை அகத்தியரிடமிருந்து கற்றார் போகர். போகர் நவபாஷாணக் கூட்டிற்கு இரண்டு முறைகளை வகுத்தார் என்பது ஆய்வாளர், முனைவர் மு.குருவம்மாள் அவர்கள் கூறும் கருத்து. பழநியை அடுத்த பூம்பாறையில், தாவரச் சாற்றினால் உப்பைக் கட்டி சக்திதன்மை மிக்க குழந்தை வேலப்பராகவும், பழநியில் சுண்ணத்தால் கட்டி சிவத்தன்மை மிக்க தண்டாயுதபாணியாகவும் ஆக்கினார் என்கிறார். சுண்ணக்கட்டு நவபாஷாணம் வெளிப்படுத்தும் வெப்பம், மந்திரசக்தி வாய்ந்த பஞ்சபூத வெக்கையாகும்.

இது நோய்க்கிருமிகளை மாய்க்கும். சந்தனக் காப்பிடும்போது தோன்றும். பழநி ஆண்டவன் தலையில் இரவு வைக்கப்படும் சந்தனம், மறுநாள் காலை பக்தர்களுக்கு மருந்தாகச் சிறு உருண்டைகளாக்கி அளிக்கப்படுகிறது. ( இதை உடனே உண்ணும்படி பக்தர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்). போகர் நிறுவிய நவபாஷாணத் திருமேனி நவகிரகத் தொடர்புடையது என்பர். பாதரசம் (சூரியன்), மதார்சிங்கி(சந்திரன்), தாலிகம்(சனி), லிங்கம்(செவ்வாய்), கந்தகம்(புதன்), வீரம்(ராகு), பூரம்(கேது), வெள்ளை (குரு), மனோசிலை(சுக்கிரன்) எனும் ஒன்பது பொருட்களும் ஒன்பது கோள்களுடன் சேர்ந்து நம்மை வழி நடத்துகின்றன. பழநி ஆண்டியை நவகிரக நாயகன் எனலாம். அவனை வணங்கினால் நவகிரகங்களும் நம் வசப்படும்.

கருமேனி கொண்ட மூர்த்தமாக அமைக்கப்பட்டுள்ளது என்றாலும், ஆண்டவன் சிலையின் உண்மையான நிறம் கரும்பச்சை என்றும், சூரிய ஒளி பட்டால் மட்டுமே இது விளக்கமாகத் தெரிய வாய்ப்புண்டு என்றும் கூறுவர். இத்திருமேனி காற்று, நீர், எண்ணெய், தேன், இவற்றால் கரையாது. நெருப்பினால் பாதிக்கப்படாது. பால், பன்னீர், சந்தனம், விபூதி, பஞ்சாமிர்தம், தயிர் இவற்றால் அபிஷேகப் பிரியனுக்கு அபிஷேகம் செய்யப்படும் போது அவை அனைத்துமே மருத்துவக்குணங்கள் பெறுகின்றன. கண்ணால் தரிசிக்கும்போது நம் உடலில் கதிர் வீசப்படுகிறது. பிரசாதங்களை உண்பதால் நோயற்ற வாழ்வு வாழலாம்.

Leave a Reply