‘உன்னால் முடியும் தம்பி’ படத்தில் கே.பாலசந்தர் காட்டியது போன்ற ஒரு கனவு கிராமம். இந்த கிராமத்தில் திருட்டு பயம் கிடையாது. கொலை, கொள்ளை என்றால் என்ன என்றே தெரியாது. சுத்தமான சாலை, சுகாதாரமான சூழல். இப்படிப்பட்ட கிராமத்தில் அருள்நிதி உள்பட நான்கு போலீஸ்காரர்கள் உள்ள ஒரு போலிஸ் ஸ்டேஷன்.
இந்த போலிஸ் ஸ்டேஷனில் 25 வருடங்களாக யாரும் புகார் கொடுக்க வராததால், இந்த போலீஸ்ஸ்டேசனை மூடிவிட காவல்துறை மேலிடம் முடிவு செய்கிறது. இதனால் அதிர்ச்சி அடையும் அருள்நிதி குரூப், எப்படியாவது ஒரு புகாரை யாரிடம் இருந்தாவது பெற்றுவிட வேண்டும் என திட்டம் தீட்டுகின்றனர். இதற்காக இவர்கள் செய்யும் ஒருசில சின்னச்சின்ன காரியங்கள், எதிர்பாராதவிதமாக விபரீதத்தை உண்டாக்கி விடுகிறது. இந்த விபரீதத்தில் இருந்து கிராமத்தை காப்பாற்றுவது எப்படி என்று தெரியாமல் நான்கு போலீஸ்காரர்களும் திணறுகின்றனர். இறுதியில் அந்த கிராமம் என்ன ஆயிற்று என்பதுதான் கதை.
அருள்நிதி, சிங்கம்புலி, பகவதி பெருமாள் உள்பட நான்கு நடிகர்களுக்கும் இந்த படத்தில் சமவாய்ப்பு கொடுத்துள்ளார் இயக்குனர். முதல்பாதியில் நகைச்சுவையில் பட்டையை கிளப்பும் நான்கு பேரும் இரண்டாவது பாதியில் சீரியஸ் ஆனவுடன் அருள்ந்தி தவிர மற்றவர்கள் கொஞ்சம் நடிப்பில் திணறுகின்றனர். சிங்கம்புலி முதல் பாதியில் சூப்பராக நடித்துள்ளார். இவரும் பகவதி பெருமாளும் கிராமத்தினர்களை தப்பு செய்து வைக்க படும் பாடு நல்ல கலகலப்பு. இவர்கள் செட்டப் செய்யும் திருடன் உண்மையான திருடனாக மாறி, அந்த பகுதியின் தீவிரவாத குரூப் தலைவன் ஆகிவிடுவது நல்ல கற்பனை
ரம்யா நம்பீசன் இந்த படத்தின் நாயகியாம். ஒரே ஒரு டூயட் பாடல், நான்கு காட்சிகள் மட்டுமே படத்தில் வருகிறார். படத்தின் மெயின்கதைக்கும் இவருக்கும் கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லை என்பதால் மனதில் ஒட்ட மறுக்கின்றார்.
படத்தில் சின்ன சின்ன கேரக்டர்களில் நடித்துள்ள அனைவருமே சிறப்பாக நடித்துள்ளார்கள். குறிப்பாக மளிகை கடை அண்ணாச்சி, பிரசிடெண்ட் ஆகியோர்கள் நடிப்பு ஓகே
ரெஜினின் இசையில் இரண்டு பாடல்கள். இரண்டுமே ரொம்ப சுமார். ஒளிப்பதிவில் பெரிதாக வித்தியாசம் செய்யக்கூடிய அளவுக்கு காட்சிகள் இல்லை. எடிட்டிங்கும் அதேபோல்தான்
இயக்குனர் ஸ்ரீகிருஷ்ணா யாரும் தொடாத வித்தியாசமான கதையை தேர்வு செய்ததற்கு பாராட்டுக்கள். ஆனால் முதல் பாதி கொஞ்சம் போர் அடிக்கின்றது. கிராமத்தில் கலவரம் வெடித்தவுடன் படம் மிக வேகமாக நகர்கிறது. ஆனால் இந்த படத்தை எப்படி முடிப்பது என்று இயக்குனர் திணறியிருப்பது தெரிகிறது. இந்த படத்தை இயக்குனர் முடித்தவிதம் சரியில்லை. கிளைமாக்ஸை கொஞ்சம் வேறு விதமாக யோசித்திருக்கலாம்.