நான் சிகப்பு மனிதன். திரைவிமர்சனம்

naan-sigappu-manithan-movie-poster-05-672x372

தீராத விளையாட்டு பிள்ளை, சமர் ஆகிய இரண்டு படங்களுக்கு பின் மூன்றாவது படமாக அதே விஷாலை வைத்து களம் இறங்கியிருக்கிறார் இயக்குனர் திரு. முந்தைய தனது இரண்டு படங்கள் போலவே முதல் பாதியை விறுவிறுப்பாக கொண்டு சென்றுவிட்டு, இரண்டாவது பாதியில் பெயருக்கேற்றவாறு திருதிருவென முழிப்பது அவருடைய திரைக்கதையில் தெரிகிறது. ஆனாலும் விஷால், லட்சுமி மேனன் ஆகியோரின் மெச்சூரிட்டியான நடிப்பு, வித்தியாசமான கான்செப்ட் சமரின் தவறுகளை மறைக்க உதவுகிறது.

இதுவரை யாருமே கேள்விப்படாத ஒரு நோய்தான் இந்த படத்தின் கதாநாயகன். அதுதான் Narcolepsy. இந்த நோய் உள்ளவர்கள் அதிர்ச்சியான செய்தியை கேட்டாலோ அல்லது உணர்ந்தாலோ உடனே தூங்கிவிடுவார்கள். அந்த தூக்கம் ஐந்து நிமிடங்கள் முதல் ஒருமணி நேரம் வரை நீடிக்கும். சாதாரணமாக இருக்கும் ஒருவர் அதிர்ச்சியான விஷயங்களை கேட்கும்போது மயக்கம் அடைவார்கள். இந்த நோய் உள்ளவர்கள் தூங்கிவிடுவார்கள். இதுதான் வித்தியாசம்.

இந்த வித்தியாசமான நோய் தாக்கப்பட்ட விஷாலை, அந்த நோயின் தீவிரம் தெரிந்தும் காதலிக்கிறார் லட்சுமி மேனன். காதலி லட்சுமி மேனனை உருகி உருகி காதலிக்கும் விஷால், அவருக்கு ஒரு ஆபத்து வரும் நேரத்தில் அவரை காப்பாற்ற முடியாமல் Narcolepsy  நோயின் தாக்கத்தல் திடீரென தூங்கிவிடுவதால், லட்சுமி மேனன் கோமா நிலைக்கு தள்ளப்படுகிறார். பின்னர் லட்சுமி மேனனை அந்த நிலைக்கு ஆளாக்குனவர்களை Narcolepsy  நோயோடு போராடிக்கொண்டே, தேடி கண்டுபிடித்து பழிவாங்குவதுதான் கதை.

பாண்டிய நாடு போலவே இதிலும் பஞ்ச் டயலாக் இல்லாமல், ஹீரோயிசம் இல்லாமல் விஷால் நடித்திருப்பது திருப்தையை தருகிறது. இனியும் இதை தொடர்வார் என நம்புவோம். Narcolepsy  நோயினால் தனக்கு கிடைக்க வேண்டிய சின்னச் சின்ன சந்தோஷங்கள் கிடைக்கவில்லையே என ஏங்குவதில் அவருடைய நடிப்பு பளிச்சிடுகிறது.

லட்சுமி மேனன் இரண்டாவதி பாதியில் முழுக்க முழுக்க கோமா நிலையிலேயே இருப்பதால் முதல் பாதியில் மட்டும் தனது நடிப்பை வெளிப்படுத்துகிறார். அவருடைய ப்ளஸ் பாயிண்டே கண்கள்தான். கண்களாலே டயலாக் பேசும் வெகு சில நடிகைகளில் இவரும் ஒருவர்.

முதல் பாதியை மிக அருமையான திரைக்கதை அமைத்து படத்தை கொண்டு சென்ற திரு, அவர் போட்ட முடிச்சை அவரே அவிழ்க்க முடியாமல் திணறுவது நன்றாக தெரிகிறது. விஷாலை பழிவாங்கும் வில்லனின் பிளாஷ்பேக் மிகக்கொடுமை. ஒரு நல்ல படத்தில் இப்படி ஒரு கேவலமான பிளாஷ்பேக்கை யாரும் எதிர்பார்க்கவில்லை.

படத்தில் கேமராமேன், எடிட்டர் மற்றும் இசையமைப்பாளர்கள் அனைவரும் கஷ்டப்பட்டு உழைத்திருப்பது தெரிகிறது. ஜி.வி.பிரகாஷின் பின்னணி இசை த்ரில் படத்துக்கே உரிய திகிலை கொடுக்கின்றது.

இரண்டாவது பாதியை இன்னும் கொஞ்சம் கவனமாக எடுத்திருந்தால் சூப்பர் ஹிட் படமாக ஆகியிருக்க வேண்டிய “நான் சிகப்பு மனிதனை, சாதாரண மனிதனாக்கிய பெருமை ‘திரு’வையே சேரும். ஆனாலும் ஒருமுறை பார்க்கலாம்.

 

[embedplusvideo height=”400″ width=”600″ editlink=”http://bit.ly/1kbv0rf” standard=”http://www.youtube.com/v/kRlmWrD8Spo?fs=1″ vars=”ytid=kRlmWrD8Spo&width=600&height=400&start=&stop=&rs=w&hd=0&autoplay=0&react=1&chapters=&notes=” id=”ep8617″ /]

Leave a Reply