தமிழகத்தை நோக்கி வருகிறது ‘நாடா’ புயல். சென்னைக்கு ஆபத்தா?
கடந்த ஆண்டு இதே நாளில் கனமழை தொடங்கி சென்னையே ஒருசில நாட்கள் மிதந்ததை இன்னும் மறக்க முடியாத நிலையில் தற்போது வங்கக்கடலில் குறைந்தழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக புயல் ஏற்பட்டுள்ளதாகவும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்த புயலுக்கு வானிலை அறிஞர்கள் ‘நாடா’ (NADA) என்ற பெயரை வைத்துள்ளனர். இந்த புயல் காரணமாக நாளை முதல் அதாவது டிசம்பர் 1 முதல் தமிழகத்தின் கரையோர மாவட்டங்களில் கனமழை, மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம், அல்லது ஆழ்கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தென்மேற்கு வங்கக் கடலில் தோன்றியுள்ள இந்த புயல் புதுச்சேரிக்கு 75 கி.மீ. தொலைவிலும், சென்னையில் இருந்து 830 கி.மீ தொலைவிலும் மையம் கொண்டுள்ளதாக என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். மேலும் புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 50 முதல் 60கி.மீ வேகத்தில் இருந்து 80 கி.மீ வேகம் வரை பலத்த காற்று வீசக்கூடும் என்றும், கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்துக்கு செல்லும்படியும் வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.