சாவித்ரிக்கு அஞ்சலி செலுத்தி படப்பிடிப்பை முடித்த ‘நடிகையர் திலகம்’ படக்குழுவினர்
மறைந்த முன்னாள் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை பற்றிய படம் தெலுங்கில் ‘மகாநதி’ என்ற பெயரிலும், தமிழில் ‘நடிகையர் திலகம்’ என்ற பெயரிலும் உருவாகி வருகிறது. நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில் சாவித்திரி வேடத்தில் கீர்த்தி சுரேஷும், ஜெமினி கணேசனாக துல்கர்சல்மானும் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில், இன்று படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்துவிட்டதாக கீர்த்தி சுரேஷ் அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். சுமார் ஒர் ஆண்டுக்குள் மேல் நடைபெற்று வந்த நம்பமுடியாத பயணம் முடிந்துவிட்டது. உணர்ச்சிப்பூர்வமாக உணர்கிறேன். சாவித்ரி வேடத்தில் நடிக்க என் மீது முழு நம்பிக்கை வைத்த நாக் அஸ்வினுக்கும், வைஜெயந்தி பிலிம்ஸ் நிறுவனத்திற்கும் நன்றி. சாவித்ரியை திரையில் பார்க்க ஆவலாக இருக்கிறேன் என்று கீர்த்தி சுரேஷ் டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த படத்தில் சமந்தா பத்திரிகை நிருபராக வருகிறார். இந்த படத்தில் சாவித்திரியை பிரபல நடிகையாக உயர்த்திய பல வெற்றி படங்களுக்கு கதாசிரியராக பணியாற்றிய அலூரி சக்ரபாணி கதாபாத்திரத்தில் பிரகாஷ்ராஜ் நடிக்கிறார். மறைந்த பழம்பெரும் நடிகை பானுமதி வேடத்தில் அனுஷ்காவும், நாகேஷ்வரராவ் கதாபாத்திரத்தில் நாக சைதன்யாவும், எஸ்.வி.ரங்காராவ் வேடத்தில் மோகன்பாபுவும் நடிக்கின்றனர்.
வைஜெயந்தி மூவிஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு மிக்கி ஜே மேயர் இசையமைக்கிறார். படம் வருகிற மே 9-ஆம் ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.