தயாரிப்பாளர் சங்கத்தை கைப்பற்ற நினைப்பது உண்மையா? நடிகர் சங்கம் விளக்கம்
சமீபத்தில் விஷால் அளித்த ஒரு பேட்டியில் எங்களது அடுத்த டார்கெட் தயாரிப்பாளர் சங்கம்தான் என்று கூறியிருந்தார். இளம் நடிகர்கள் பலர் தயாரிப்பாளர்களாக இருப்பதால் கலைப்புலி எஸ்.தாணுவின் தலைவர் பதவியை விஷால் குறிவைத்துவிட்டார் என்றே செய்திகள் வெளிவந்தன. இந்நிலையில் இதுகுறித்து நடிகர் சங்கம் ஒரு விளக்க அறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கடந்த சில நாட்களாக பத்திரிகை ஊடகம் மற்றும் திரைத்துறையினர் மத்தியில் தயாரிப்பாளர் சங்க தேர்தலில் நடிகர் சங்கம் தலையிடப் போவதாக பரபரப்பான செய்திகள் வந்தபடி உள்ளன. அதுபற்றி எங்களின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்த கடந்த செயற்குழுவில் விவாதிக்கப்பட்டது
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் என்பது மிகப்பெரிய அமைப்பு. திரை உலகின் முதுகெலும்பு போன்ற அதனது தலைமையை தீர்மானிக்க வேண்டியது அதை சார்ந்த உறுப்பினர்கள் தான். அதில் ஓட்டுரிமை இல்லாத தென்னிந்திய நடிகர் சங்கம் எக்காரணத்தை முன்னிட்டும் தலையிடாது. ஆனால் அதே சமயம் எங்களது உறுப்பினராக உள்ள நடிகர்கள் மற்றும் தற்போதைய நிர்வாகத்தில் பொறுப்பில் உள்ள நடிகர்கள் பலரும் தங்களது சங்கத்தில் தயாரிப்பாளர்களாக உள்ள நிலையில் தயாரிப்பாளர் சங்கம் பற்றி அவர்களின் நிலைப்பாடு மற்றும் ஊடக பேட்டி தேர்தல் பற்றி அவர்கள் எடுக்கும் முடிவுகளை உங்கள் உறுப்பினராக கருதியே நீங்கள் அணுக வேண்டும்.
நடிகர் சங்கத்துடன் அதை தொடர்புபடுத்தி பார்க்க வேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம். அதேபோல் நீங்களும் தென்னிந்திய நடிகர் சங்கத்த தொடர்புபடுத்தி பேசுவதை தவிர்க்கும்படி உங்களது உறுப்பினர்களுக்கு தெரிவிக்க வேண்டுகிறோம். தங்களின் சங்கம் சுதந்திரமாக தேர்தலை நடத்தி அதன் மூலம் வரும் நிர்வாகத்துடன் இணைந்து செயல்படவே நாங்கள் விரும்புகிறோம். \
இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.