சிரஞ்சீவியின் தம்பியும் தெலுங்கு நடிகருமான பவண் கல்யாண் புதிய கட்சி ஆரம்பித்தவுடன் பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து தனது ஆதரவை வழங்கினார். இந்நிலையில் ஆந்திராவின் இன்னொரு சூப்பர் ஸ்டார் இன்று நரேந்திர மோடியை சந்திக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளன.
தெலுங்கின் முன்னணி நடிகர் 54 வயது நாகார்ஜுனா இன்று அகமதாபாத் நகரில் நரேந்திர மோடியை சந்திக்கவுள்ளார். பாரதிய ஜனதாவுக்கு தனது ஆதரவை வழங்க இருப்பதாக்வும், மோடி பிரதமர் ஆவதற்கு ஆந்திரா முழுவதும் பாரதிய ஜனதாவிற்காக பிரச்சாரம் செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது.
நாகார்ஜுனாவின் மனைவி நடிகை அமலாவுக்கு ஆந்திர மாநிலத்தின் ஒரு முக்கிய தொகுதியை கேட்டிருப்பதாகவும், அதற்கு பாரதிய ஜனதா தலைமை ஒப்புக்கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அனேகமாக அமலா ஐதராபாத் தொகுதியில் போட்டியிடுவார் என கூறப்படுகிறது.
ஆந்திராவில் உள்ள இரண்டு பெரிய நடிகர்கள் மோடிக்கு ஆதரவு கொடுத்துள்ளதால், தெலுங்கு தேச கட்சியும், காங்கிரஸ் கட்சியும் அதிர்ச்சி அடைந்துள்ளன. இதனிடையே ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டியின் அலையும் வீசி வருவதால் காங்கிரஸின் நிலைமை தமிழகத்தை போல ஆந்திராவிலும் பரிதாபமாக காணப்படுகிறது.