நகங்களுக்கு நல்ல நகப்பூச்சு!

nailபெண்கள் தங்களுடைய அழகுக்காக செயற்கை ரசாயன அழகுப் பொருட்களையே அதிக அளவு பயன்படுத்துகிறார்கள். மற்ற அழகு சாதனப் பொருட்களில் எந்த அளவுக்கு ரசாயனங்கள் உள்ளன என்று பெரும்பாலும் தெரிவதில்லை. ஆனால், நகத்தை அழகுபடுத்த பயன்படும் நெயில் பாலிஷ் முழுக்க முழுக்க பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய ரசாயனம் எனத் தெரிந்தும் துணிந்து பயன்படுத்துகிறோம்.

இது ஆரம்பத்தில் அழகாக இருந்தாலும், சில காலங்கள் கழித்து அழகுடன், ஆரோக்கியத்தையும் சீர்கேடு அடையச் செய்துவிடுகிறது.

செயற்கை நகப்பூச்சுகளால் ஏற்படும் பிரச்னைகள்

கண்ணைக் கவரும் விதமாக பல வண்ணங்களில் அடர்த்தியாக இருக்கும் நகப்பூச்சைப் பயன்படுத்துவதால், அதில் உள்ள வேதிப்பொருட்கள், நகங்கள், தோல், நுரையீரல் மற்றும் மூளை வரை பாதிப்பை ஏற்படுத்தும்.

நகப்பூச்சை அதிக அளவு பயன்படுத்தும்போது, நகத்தைச் சுற்றியும், தசைப்பகுதியையும் பாதித்து நகங்களின் பளபளப்புத் தன்மை இழந்து, எளிதில் உடையும்படி ஆகிவிடும். அவை நகத்தை மெலிதாக்கி, தொற்றுக்கிருமிகள் ஊடுருவும் வாய்ப்பை ஏற்படுத்தும்.

நகப்பூச்சில் இருந்து வெளிவரும் வாசனை நுரையீரலைப் பாதிக்கும். அந்த வாசனைக்கு மூளைச் செல்களை அடிமையாக்கும் தன்மையும் உள்ளது.

தவிர, புற்றுநோய் ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை உருவாக்கும் தன்மை இதில் உள்ள ரசாயனங்களுக்கு உள்ளதால், நகப்பூச்சுக்களை முடிந்தவரை பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.

நகப்பூச்சுகளைப் பயன்படுத்தக்கூடிய சூழலில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்

திருமணம் போன்ற விசேஷங்களுக்குச் செல்கிறேன். அதனால், கட்டாயம் நகப்பூச்சு பூச வேண்டும் என விரும்புகிறவர்கள், மெல்லிய துணியினால் முகத்தை மூடியபடி பயன்படுத்தலாம்.

விசேஷம் முடிந்ததும், நெயில்பாலீஷ் ரிமூவர் பயன்படுத்தி, நகப்பூச்சுக்களை அகற்றிவிட வேண்டும்.

நகம் அழகாகத் தெரிய, மருதாணி இலையை வீட்டிலேயே அரைத்துப் பூசலாம்.

நகங்களைப் பராமரித்தல்

நகங்களை, குளித்த பிறகும், எண்ணெய் தேய்த்து ஊறிய பிறகும், குட்டையாகவும் பிசிறு இல்லாமலும் வெட்டலாம்.

இரவு நேரங்களில் நகம் வெட்டுவதைத் தவிர்க்க வேண்டும்.

பிளேடு போன்றவற்றால் வெட்டாமல், நகவெட்டியைக் கொண்டு நகம் வெட்ட வேண்டும்.

நகங்களைப் பெரியதாக வளர்ப்பதால், அதில் அழுக்கும் கிருமிகளும் சேர்த்து, வயிற்றுவலி, வாந்தி, பேதி, டைஃபாய்டு போன்ற நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

நகங்களைச் சுத்தமாக வைத்துக்கொள்வதுடன் நகங்களின் பக்கத்தில் உள்ள தசைப்பகுதியை சுத்தமாக வைக்க வேண்டும்.

பாத்திர சோப்புகள் மற்றும் பவுடர்கள், வேதிப்பொருட்களின் பயன்பாடு, உணவு உண்ணும் முன்பு, மலம் கழித்த பின்னர் கைகளை பலமுறை சோப்புபோட்டுக் கழுவ வேண்டும்.

இரவு தூங்கும் முன்பு தேங்காய் எண்ணெயைத் தேய்த்து மசாஜ் செய்யலாம்.

பெண்கள் அதிகமாகத் தண்ணீரில் வேலை செய்வதால் நகச்சொத்தை,நகமுடைதல் போன்றவற்றில் இருந்து நகங்களைப் பாதுகாக்க ஈரத்தை துடைத்துவிட்டு நெய், வெண்ணெய், தேங்காய் எண்ணெய் போன்றவற்றைப் பயன்படுத்தலாம்.

இயற்கை நகப்பூச்சை பயன்படுத்துதல் நலம். இயற்கை நகப்பூச்சு என்பது மருதாணிதான்.இதனை அரைத்து நகங்களில் பூசுவதால் பூஞ்சை போன்ற நோய்க்கிருமிகளில் இருந்து நகங்களையும் விரல்களையும் காப்பாற்றலாம்.

மருதாணியை விரலின் நுனியிலும் நகங்களிலும் வைப் பதால் அதிகப்படியான பித்தத்தைக் குறைக்கும். நகத்தையும் தூய்மையாக வைக்கும். இந்த இயற்கை நகப்பூச்சான மருதாணி நகங்களை வலிமை யாக்கும். விரல் நுனிகளுக்கு சக்தியைத் தரும்.

நகச்சுற்று போன்ற நோய்கிருமிகளில் இருந்து விரல்களை பாதுகாக்கலாம். உள்ளங்கை மற்றும் உள்ளங்காலில் வைப்பதால் அதிகப்படியான பித்தம் மற்றும் எரிச்சல் குறையும்.

செயற்கை மருத்துவ பௌடர், பிளாக் ஹென்னா பெளடர் போன்றவற்றைப் பயன்படுத்தாமல், இயற்கைமுறையில் கிடைக்கும் மருதாணியை அரைத்துப் பயன் படுத்தலாம். அழகோடு, ஆரோக்கியமும் நமக்கு சொந்தமாக இருக்கும்.

மருதாணிப் பூ வாசனையும் நல்ல தூக்கத்தையும் உண்டாக்கும். மனதுக்கு சாந்தி அளிக்கும். நகத்தைச் சுற்றி எந்த தோல் வியாதியும் வராமல் பாதுகாக்கும்.

Leave a Reply