டெல்லியில் “ஜனாதிபதி ஆட்சி” அமைக்க ஆளுநர் பரிந்துரை

டெல்லி சட்டமன்றத்துக்கு நடந்த தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இந்த தேர்தலில் பா.ஜனதா கட்சி 31 இடங்களையும், ஆம் ஆத்மி கட்சி 28 இடங்களையும், காங்கிரஸ் 8 இடங்களையும் பெற்றன. எனவே ஆட்சி அமைக்க பெரும்பான்மை (36 இடங்கள்) கிடைக்காததால், பா.ஜனதா கட்சி உரிமை கோரவில்லை. மேலும் ஆம் ஆத்மி கட்சியும் ஆட்சி அமைக்க உரிமை கோரமாட்டோம் என்று அறிவித்தது.

இந்தநிலையில் தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்ற பா.ஜனதாவை ஆட்சி அமைக்கும்படி டெல்லி துணைநிலை கவர்னர் நஜீப் ஜங் அழைப்பு விடுத்தார். ஆனால் ஆட்சி அமைக்க அக்கட்சி மறுத்து விட்டது. இதைத்தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சித்தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, கவர்னர் அழைப்பு விடுத்தார். ஆனால் அக்கட்சியும் தயக்கம் காட்டியது.

இந்நிலையில் டெல்லியில் புதிய அரசு அமைப்பதற்கான காலக்கெடு நாளையுடன் முடிவடைகிறது. ஆனால் இதுவரை எந்த கட்சியும் ஆட்சி அமைக்க உறுதியான நடவடிக்கைகளில் இறங்காததால், குடியரசுத்தலைவர் ஆட்சிக்கு துணைநிலை கவர்னர் நஜீப் ஜங் பரிந்துரை செய்துள்ளார்.

டெல்லி அரசியல் நிலவரம் குறித்து பல்வேறு அம்சங்களை அந்த கடிதத்தில் விளக்கியுள்ள அவர், ஆட்சி அமைக்க அரவிந்த் கெஜ்ரிவால் கால அவகாசம் கேட்டது குறித்தும் கூறியிருப்பதாக தெரிகிறது.

இந்த கடிதம் குறித்து கூறிய மத்திய உள்துறை மந்திரி சுஷில்குமார் ஷிண்டே, கடிதத்தில் கூறப்பட்டுள்ள தகவல்கள் குறித்து சட்டப்பூர்வமாக ஆய்வு செய்து வருவதாக தெரிவித்தார்.

அடுத்த 2 நாட்களுக்குள் எந்த கட்சியும் ஆட்சி அமைக்க முன்வராவிடில், டெல்லியில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்படும் என்று தெரிகிறது. இது தொடர்பாக விரைவில் மத்திய அமைச்சரவை கூடி விவாதித்து ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்யும்.

Leave a Reply