25 ஆண்டுகளுக்கு பின்னர் பரோலில் வெளியே வந்தார் நளினி
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு கடந்த 25 ஆண்டுகளாக வேலூர் சிறையில் தண்டனை அனுபவித்து வரும் நளினி தற்போது தந்தையின் மரணம் காரணமாக பரோலில் வெளியே வந்துள்ளார்.
நளினியின் தந்தை சங்கரநாராயணன் கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டிருந்த நிலையில் நேற்று மாலை மரணம் அடைந்தார். அவருக்கு வயது 91. ஓய்வுபெற்ற காவல் ஆய்வாளரான சங்கர நாராயணனின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள நளினிக்கு சிறை அதிகாரிகள் பரோலில் செல்ல அனுமதித்துள்ளனர். நளினி இன்று காலை 8 மணியிலிருந்து இரவு 8 மணி வரை 12 மணி நேரம் தந்தையின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்ளலாம் என சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த அனுமதியை அடுத்து பலத்த காவலுடன் இன்று காலை, வேலூர் பெண்கள் சிறையில் இருந்த நளினியை காவலர்கள் தந்தையின் இறுதிச்சடங்கு நடைபெறும் சென்னை கோட்டூர்புரத்திற்கு அழைத்து சென்றனர். இன்று மாலை இறுதிச்சடங்கில் கலந்து கொண்ட பின்னர் இரவு மீண்டும் வேலூர் சிறைக்கு அழைத்து வரப்படுவார் என கூறப்படுகிறது.