மோசடி குற்றச்சாட்டில் ப.சிதம்பரத்தின் மொத்த குடும்பமும் சிக்கியதா?
முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் மீது, அவருடைய மகன் கார்த்திக் சிதம்பரம் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் குவிந்துள்ள நிலையில் தற்போது அவருடைய மனைவி நளினி சிதம்பரம் மீதும் மோசடி வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. இதன்மூலம் ப.சிதம்பரம் குடும்பமே குற்றச்சாட்டுக்களால் சிக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் கார்த்திக் சிதம்பரம் 14 நாடுகளில் முறைகேடாக சொத்துக் குவித்துள்ளதாகவும் இதுகுறித்து பாராளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்றும் அதிமுக எம்.பி.க்கள் வலியுறுத்தியதால் பாராளுமன்றத்தில் இரு அவைகளும் முடங்கியது. இந்த பரபரப்பே இன்னும் நீங்காத நிலையில் தற்போது சாரதா நிதி நிறுவனத்தில் நடந்த மோசடி தொடர்பான வழக்கு ஒன்றில் ப.சிதம்பரத்தின் மனைவி நளினி மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் சுதீப்சென் என்பவர் கைது செய்யப்பட்டு விசாரணை நடந்து வரும் நிலையில் அவர் ப.சிதம்பரத்தின் மனைவி வக்கீல் நளினியும் இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளதாக விசாரணையின்போது தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து சாரதா நிதி நிறுவன வழக்கு தொடர்பாக நேரில் ஆஜராகுமாறு நளினிக்கு சி.பி.ஐ. அதிகாரிகள் சம்மன் அனுப்பியுள்ளனர். ஏற்கனவே ப.சிதம்பரம் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகள் இருக்கும் நிலையில் தற்போது அவருடைய குடும்பமே சிக்கலில் உள்ளதாக கூறப்படுகிறது.