தமிழில் தனக்கிருக்கும் பேச்சாற்றல் மற்றும் எழுத்தாற்றல் மூலமாக உலகெங்கும் இருக்கும் தமிழ் மக்களைச் சென்றடைந்தவர், நம் தமிழ்நாட்டுப் பெண்களை ஊர் ஊராகச் சென்று சந்தித்து, தன்னம்பிக்கைப் பேச்சால் கவர்ந்து, சுயதொழில் ஆலோசனைகள் வழங்கி, அவர்களிடம் முன்னேற்ற மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என்ற குறிக்கோளோடு இயங்கி வருபவர், சென்னையைச் சேர்ந்த நளினி சம்பத்குமார்.
சமீபத்தில் நளினி ஒரு பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் இருந்து சில பகுதிகள்:
”பிறந்து, வளர்ந்து, படிச்சது எல்லாமே சென்னையில்தான். சின்ன வயதில் இருந்தே, தமிழ் மேல எனக்கு அவ்வளவு பிரியம். பள்ளி, கல்லூரியில் தமிழ் சார்ந்த போட்டிகளில் பரிசு நளினிக்குதான். படிச்சது பி.ஏ., ஆங்கிலமா இருந்தாலும், இன்று வரை தமிழ் மீதான ஆசையும் ஆர்வமும்தான் நாளுக்கு நாள் வளர்ந்துட்டே வருது.
93-ல கல்லூரிப் படிப்பை முடிச்ச எனக்கு, அடுத்த வருடமே திருமணம். கணவரோட வேலை காரணமா, சிங்கப்பூர்ல குடியேறினோம். அப்போதான், மொழி ஆர்வத்தை வெளிப்படுத்த முடிவு பண்ணி, அங்க இருந்த ‘ஒலி-96.8’ ரேடியோவில் சேர்ந்தேன். இது, அங்க இருக்கிற பலவிதமான மக்களை சந்திக்கவும், அவங்களைப் பத்தி தெரிஞ்சிக்கவும் வாய்ப்பை தந்துச்சு. குறிப்பா, அங்க இல்லத்தரசிகள் எல்லோருமே, வீட்டில் இருந்தே செய்யக்கூடிய ஏதாவது ஒரு வேலையை தன்னம்பிக்கையோட செஞ்சுட்டு இருக்கறது எனக்குள்ள ஆச்சர்யத்தை ஏற்படுத்துச்சு. அதைப் பார்த்தப்போ, நம்ம நாட்டுப் பெண்களுக்கும் இந்த எண்ணத்தை ஏற்படுத்தணும்னு மனசுக்குள்ள தீர்மானிச்சுக்கிட்டேன்.
அந்த நாட்டு தமிழ் பத்திரிகையில எழுதறதுக்கு எனக்கு கிடைச்ச வாய்ப்பையும் பயன்படுத்திக்கிட்டேன். அதன் மூலமா என் தமிழ் எழுத்துக்களுக்கும் அங்கீகாரம் கிடைச்சுது. கையில குழந்தை, ரேடியோ, பத்திரிகைனு வாழ்க்கை பரபரனு நகர்ந்தாலும், பிடிச்சுருந்ததால… ரசிச்சு செய் தேன்” என்பவரின் குரலில், அத்தனை உற்சாகம்!
அடுத்த வருடமே கணவரின் பணி மாற்றத்தால் அமெரிக்காவுக்கு குடி பெயர்ந்தாலும்… ரேடியோ மற்றும் எழுத்துப் பணிகளையும் தொடர்ந்திருக்கிறார். அமெரிக்க இரட்டை கோபுர தகர்ப்பு தருணத்தில், அதிலிருந்த தப்பித்த தமிழர்களை இவர் எடுத்த பேட்டியை ரேடியோவில் கேட்ட பலரிடமிருந்தும் கண்ணீர் கடிதங்கள் இவரைத் தேடி வந்துள்ளன.
”அப்போதான் என் வேலை மீது எனக்கே மதிப்பு இன்னும் அதிகமாச்சு. அமெரிக்க தமிழ் குழந்தைகளை நல்ல தமிழ் பேச வைக்கறவிதமா, ‘தமிழ் அமுதம்’ நிகழ்ச்சியை நடத்தினேன். அதுக்கு கிடைச்ச வரவேற்பும், பாராட்டும்… தமிழுக்கு என்னால முடிஞ்சதை செய்த திருப்தி கொடுத்துச்சு” என்றவர், 2008-ம் ஆண்டு சென்னை திரும்பியிருக்கிறார். அதன்பின், ‘வெற்றி ஊற்று’ (Winspire) என்ற அமைப்பைத் தொடங்கி, பெண்கள் மத்தியில் தன்னம்பிக்கையை விதைத்து, அவர்களை சுயதொழில் பக்கம் திருப்பும் வேலையை, கணவர் சம்பத்குமாரின் உதவியோடு செயல்படுத்தி வருகிறார்.
”இதுக்காக நான் நடத்தற நிகழ்ச்சிகள் மூலமா, பெண்கள் பலரும் சுயதொழிலில் ஆர்வம் ஏற்பட்டு, அதுல இறங்கி, வீட்டி லிருந்தபடியே சம்பாதிக்கறாங்க. வெள்ளக்கோவில், ஈரோடு, திருப்பூர்னு ஒவ்வொரு ஊரா போய்க்கிட்டே இருக்கேன். நான் சந்திக்கும் பெண்கள்கிட்ட பேப்பரில் சில கேள்விகள் எழுதிக் கொடுத்து பதில் வாங்கி, அதன் அடிப்படையில் அவங்களோட திறமை என்ன, அதுக்கு ஏற்ப அவங்களுக்கு எந்த மாதிரியான பயிற்சியைக் கொடுக்கலாம்னு தீர்மானிப்பேன். வேண்டிய சுயதொழில் பயிற்சி, அதற்கான ஆலோசனை, உதவிகள்னு ஒவ்வொண்ணா கொடுத்து, அவங்களால அதை வெற்றிகரமா செய்யமுடியும்னு தன்னம்பிக்கை ஊட்டுவேன். இதன் மூலமா பலரிடத்திலும் ஏற்பட்டிருக்கிற மாற்றம்… என்னோட இந்த பயணத்துக்கு கிடைச்ச வெற்றி!” என்றவர், தற்போது சேனல்கள், பத்திரிகைகள் மூலமாகவும் தொடர்ந்து தன்னம்பிக்கையை விதைத்து வருகிறார்.