நமச்சிவாயத்திருப்பதிகம்‬

12096032_1681056992117906_5303058078935598677_n
காத லாகிக் கசிந்துகண் ணீர்மல்கி

ஓது வார்தமை நன்னெறிக் குய்ப்பது
வேதம் நான்கினும் மெய்ப்பொரு ளாவது
நாதன் நாமம் நமச்சி வாயவே

உள்ளன்பு கொண்டு மனம் கசிந்து கண்ணீர் பெருகி தன்னை ஓதுபவர்களை முத்திநெறியாகிய நன்னெறிக்குக் கூட்டுவிப்பதும், நான்கு வேதங்களின் உண்மைப் பொருளாக விளங்குபவனும், அனைவருக்கும் தலைவனான சிவபெருமானின் திருநாமம் ‘நமச்சிவாய’ என்ற திருவைந்தெழுத்தாகும்.

நம்பு வாரவர் நாவி னவிற்றினால்
வம்பு நாண்மலர் வார்மது வொப்பது
செம்பொ னார்தில கம்முல குக்கெலாம்
நம்பன் நாமம் நமச்சி வாயவே

சிவபெருமானின் திருவடிகளையே பற்றுக் கோடாக நம்பும் பக்தர்கள் திருவைந்தெழுத்தைத் தங்கள் நாவினால் உச்சரித்தால், நறுமணம் கமழும் நாள்மலர்களில் உள்ள தேன்போல இனிமை பயப்பது, எல்லா உலகங்கட்கும் செம்பொன் திலகம் போன்றது நம்முடைய சிவபெருமானின் திருநாமமான ‘நமச்சிவாய’ என்னும் திருவைந்தெழுத்தே ஆகும்.

நெக்கு ளார்வ மிகப்பெரு கிந்நினைந்
தக்கு மாலைகொ டங்கையி லெண்ணுவார்
தக்க வானவ ராத்தகு விப்பது
நக்கன் நாமம் நமச்சி வாயவே

உள்ளம் நெகிழ்ந்து அன்புமிகப் பெருக சிவ பெருமானைச் சிந்தித்து, தமது அழகிய கையில் உருத்திராக்க மாலையைக் கொண்டு திருவைந்தெழுத்தை விதிப்படிச் செபிப்பவர்களைத் தேவர்களாக்கும் தகுதியைப் பெறும்படிச் செய்வது ஆடையில்லாத சிவபெருமானின் திருநாமமாகிய ‘நமச்சிவாய’ என்னும் திருவைந்தெழுத்தேயாகும்.

இயமன் றூதரு மஞ்சுவ ரின்சொலால்
நயம்வந் தோதவல் லார்தமை நண்ணினால்
நியமந் தானினை வார்க்கினி யானெற்றி
நயனன் நாமம் நமச்சி வாயவே 3.049.4

தன்னை நாடோறும் தியானித்து வழிபடும் அடியவர்கட்கு என்றும் நன்மை செய்பவனும், நெற்றிக்கண்ணை உடையவனுமான சிவபெருமானின் திருநாமம் ‘நமச்சிவாய’ என்ற திருவைந்தெழுத்தாகும். இனிமையான சொற்களால் திருவைந்தெழுத்தை நயம்பட ஓதவல்லவர்களை எவரேனும் அண்டினால், அங்ஙனம் அண்டியவர்களையும் அணுக இயமன் தூதன் பயப்படுவான்.

கொல்வா ரேனுங் குணம்பல நன்மைகள்
இல்லா ரேனு மியம்புவ ராயிடின்
எல்லாத் தீங்கயு நீங்குவ ரென்பரால்
நல்லார் நாமம் நமச்சி வாயவே

கொலைத்தொழிலில் ஈடுபட்டவர்களாக இருப்பினும், நற்குணமும், பல நல்லொழுக்கங்களும் இல்லாதவர் ஆயினும் ஏதேனும் சிறு பூர்வ புண்ணியத்தால் திருவைந்தெழுத்தை உச்சிப்பார்களேயானால் எல்லாவிதமான தீங்குகளினின்றும் நீங்குவர் என்று பெரியோர்கள் கூறுவர். அத்தகைய சிறப்புடையது எல்லோருக்கும் நன்மையே செய்பவனாகிய சிவபெருமானின் திருப்பெயரான ‘நமச்சிவாய’ என்னும் திருவைந்தெழுத்தேயாகும்.

12105796_1681056322117973_4283918976957943933_n

மந்த ரம்மன பாவங்கண் மேவிய
பந்த னையவர் தாமும் பகர்வரேல்
சிந்தும் வல்வினை செல்வமு மல்குமால்
நந்தி நாமம் நமச்சி வாயவே

மந்தர மலை போன்ற பாவங்களைச் செய்து பாசங்களால் கட்டுண்டவர்களும், திருவைந்தெழுத்தை உச்சரிப்பார் களேயானால் அவர்களது கொடியவினைகள் தீர்ந்து போகும். அவர்கட்குச் செல்வமும் பெருகும். அத்தகைய சிறப்புடையது நந்தி என்னும் பெயருடைய சிவபெருமானின் திருநாமமான ’நமச்சிவாய’ என்பதாகும்.

நரக மேழ்புக நாடின ராயினும்
உரைசெய் வாயின ராயி னுருத்திரர்
விரவி யேபுகு வித்திடு மென்பரால்
வரதன் நாமம் நமச்சி வாயவே

எழ் நரகங்கட்குச் செல்லக் கூடிய பாவிகளானாலும் திரவைந்தெழுத்பை பக்தியோடு உச்சரிப்பார்களேயானால், உருத்திர கணத்தாரோடு சேர்ந்து வசிக்கும் பேற்றினைப் பெறுவர். அடியவர்கள் கேட்ட வரமெல்லாம் தரும் சிவபெருமானின் திரு நாமமும் திருவைந்தெழுத்தே ஆகும்.

இலங்கை மன்ன னெடுத்த வடுக்கன்மேல்
தலங்கொள் கால்விரல் சங்கர னூன்றலும்
மலங்கி வாய்மொழி செய்தவ னுய்வகை
நலங்கொள் நாமம் நமச்சி வாயவே

இலங்கை மன்னனான இராவணன் திருக்கயிலையைப் பெயர்த்து எடுக்க முயல, சங்கரன் தன் காற்பெருவிரலை ஊன்றவும், கயிலையின் கீழ் நெருக்குண்டு அவன் வாய்விட்டு அலற அவனுக்கு உய்யும்நெறி அருளி, நன்மை செய்வதையே தன் இயல்பாக உடைய சிவபெருமானின் திருநாமமாகிய ‘நமச்சிவாய’ என்ற திருவைந்தெழுத்தாகும்.

போதன் போதன கண்ணனு மண்ணல்தன்
பாதந் தான்முடி நேடிய பண்பராய்
யாதுங் காண்பரி தாகி யலந்தவர்
ஓதும் நாமம் நமச்சி வாயவே

தாமரை மலரில் வீற்றிருக்கின்ற பிரமனும், தாமரை மலர் போன்ற கண்களையுடைய திருமாலும், எல்லோருக்கும் தலைவரான சிவபெருமானின் திருமுடியையும், திருவடியையும் தேட முயற்சித்து காண இயலாதவராகித் தம் செயலுக்கு வருந்திப் பின்னர் அவர்கள் நல்லறிவு பெற்று ஓதி உய்ந்தது ‘நமச்சிவாய’ என்ற திருவைந்தெழுத்தேயாகும்.

கஞ்சி மண்டையர் கையிலுண் கையர்கள்
வெஞ்சொன் மிண்டர் விரவில ரென்பரால்
விஞ்சை யண்டர்கள் வேண்ட வமுதுசெய்
நஞ்சுண் கண்டன் நமச்சி வாயவே

தேவர்கள் வேண்ட நஞ்சினை உண்டு அதை கழுத்தில் தேக்கிய நீலகண்டனான சிவபெருமானின் திருநாமமாகிய ‘நமச்சிவாய’ என்னும் திருவைந்தெழுத்து மந்திரத்தை, மண்டை என்னும் ஒருவித பாத்திரத்தில் கஞ்சியைக் குடிக்கும் வழக்கமுடைய பௌத்தர்களும், கைகளையே பாத்திரமாகக் கொண்டு அதில் உணவு ஏற்றுப் புசிக்கும் வழக்கமுடைய சமணர்களும் ஓதும் பேறு பெற்றிலர்.

நந்தி நாமம் நமச்சிவா யவெனும்
சந்தை யாற்றமிழ் ஞானசம் பந்தன்சொல்
சிந்தை யால்மகிழ்ந் தேத்தவல் லாரெலாம்
பந்த பாசம் அறுக்கவல் லார்களே

நந்தி என்னும் பெயருடைய சிவபெருமானின் திருநாமமாகிய ‘நமச்சிவாய’ என்னும் திருவைந்தெழுத்தைச் சந்தம் மிகுந்த தமிழ் கொண்டு ஞானசம்பந்தன் அருளிச் செய்த இத்திருப்பதிகத்தைச் சிந்தை மகிழ ஓத வல்லவர்கள் பந்தபாசம் அறுக்க வல்லவர் ஆவர்.

திருச்சிற்றம்பலம்

Leave a Reply