வெள்ளையர்களிடம் இந்தியா அடிமைப்பட்டு இருந்த காலத்தில் நடப்பது போன்ற கதை. பெண் அடிமைத்தனத்தையும், பால்ய விவாகத்தையும் எதிர்க்கும் சீரியஸான கதையம்சம் கொண்ட படம்தான் நம்ம கிராமம்.
பாலக்காடு பிராமண குடும்பத்தை சேர்ந்தவர் மோகன்சர்மா. இவர் தனது அன்பான குடும்பத்துடனும், தங்கையுடனும் கூட்டுக்குடும்பமாக சந்தோஷமாக ஒரு கிராமத்தில் வாழ்ந்து வருகிறார். மோகன் சர்மாவின் தங்கை மகள் துளசிக்கு குழந்தை பருவத்திலேயே சுனில் என்ற பையனுக்கு பால்ய விவாகம் செய்து வைக்கின்றனர் குடும்பத்தினர். ஆனால் திருமணம் முடிந்த சில மணி நேரங்களிலேயே சுனில் பாம்பு கடித்து இறந்து விடுகிறான். அதனால் விதவையாகிவிட்ட சிறு பெண்ணை மொட்டையடிக்க வேண்டும் என குடும்பத்தின் பெரியவர்கள் முடிவெடுக்கும்போது மோகன் சர்மாவின் தாயார் தடுத்து நிறுத்துகிறார். அதனால் அந்த நிகழ்ச்சி தள்ளிக்கொண்டே போகிறது.
மிகுந்த கட்டுப்பாட்டுடன் ஒரு விதவையை போலவே துளசியை அந்த வீட்டில் உள்ளவர்கள் நடத்துகிறார்கள். இதனை கண்டு கொதிக்கிறான் மோகன் சர்மாவின் மகன் கண்ணன்.
மோகன் சர்மாவின் தாயார் இறந்தவுடன் துளசிக்கு மொட்டை அடிக்க குடும்பத்தினர் அனைவரும் முடிவெடுக்கும்போது துளசி விதவை இல்லை நான் தான் துளசியின் கணவன் என கூறி, துளசியின் கழுத்தில் தாலி கட்டி புரட்சி ஏற்படுத்துகிறான் கண்ணன். இதனால் அந்த கிராமத்தில் பெரிய பிரச்சனை ஏற்பட இந்த கிராமமே வேண்டாம் என கூறிவிட்டு கண்ணன் துளசியை அழைத்துக்கொண்டு பட்டணம் செல்கிறான். அவர்கள் பட்டணம் செல்லும் நாளில்தான் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைக்கிறது. துளசிக்கும் விடுதலை கிடைக்கிறது.
மோகன் சர்மா படத்தில் நடித்தும் இயக்கியும் உள்ளார். அவரது அம்மாவாக வரும் சுகுமாரி கதாபத்திரத்திற்கான சரியான தேர்வு. மேலும் படத்தில் நடித்துள்ள அனைவரும் பாலக்காடு பிராமணர்களாகவே மாறியுள்ளனர். ஒளிப்பதிவு, இசை, எடிட்டிங் என அனைத்து அம்சங்களும் அருமை.
இது படமல்ல. ஒரு நல்ல பாடம்.