ஸ்வாமி நம்மாழ்வார் அவதரித்த பெருமையை உடையது இந்த வைகாசி மாதம். நம்மாழ்வாரைத் தவிர, திருக்கோட்டியூர்நம்பி, பெரியதிருமலைநம்பி, பிள்ளை திருமலை நம்பி, திருவாய்மொழிப்பிள்ளை, பராசர் பட்டர், வேதவியாசபட்டர் மற்றும் திருவரங்கப் பெருமாள்அரையர் ஆகிய ஆசார்யர்களும் அவதரித்தது வைகாசி மாதமே. ஆந்திர மாநிலம் தாள்ளபாக்கம் வரகவி, பதகவித பிதாமகா என்று வணங்கப்படும் அன்னமாசார்யா அவதரித்தது வைகாசி விசாகத்தன்றே!
நெடுநாட்கள் குழந்தை பாக்யம் இல்லாத காரியாரும், உடையநங்கையும் திருக்குறுங்குடி எம்பெருமானைப் பிரார்த்திக்க, நம்பி, நம்மாழ்வாராக அவதரித்தார் எனப்படுகிறது. இதேபோல், தாள்ளபாக்கம் நாராயணசூரி மற்றும் லக்கமாம்பா தம்பதியினர், பிள்ளை வரம் வேண்டி, வேங்கடேசனைச் சரணடைந்தனர். அவன், தன் நாந்தகம் என்னும் வாளின் அம்சமாக அன்னமாசார்யாவை அவதரிக்கச் செய்தான்.
நம்மாழ்வார் அவதரித்து பதினாறு ஆண்டுகள் ஓர் புளிய மரப்பொந்திலேயே ஊண், உறக்கம் இன்றி அமர்ந்திருந்தார். பிறகு, எம்பெருமானால், மயர்வற மதிநலம் அருளப் பெற்று, நான்கு வேதங்களுக்கு இணையான நான்கு திவ்ய ப்ரபந்தங்களை அருளிச் செய்தார். “வேதம் தமிழ் செய்த மாறன் சடகோபன் வண்குருகூர் ஏறு” என்று நாதமுனிகளால் வணங்கப்படுகிறார் அன்றோ!
அன்னமாசார்யாவும் பதினாறு ஆண்டு காலம், எதிலும் நாட்டம் இல்லாதவராகவே வாழ்ந்தார். பிறகு, திருவேங்கடத்தானால் ஆட்கொள்ளப்பட்டு, கடினமான வேதத்தின் பொருளை, பாமர்களும் அறிந்துகொள்ளும்படி இனிய தெலுங்கு மொழியில் 32,000 கீர்த்தனைகள் பாடி அருளினார். இதையே, அவருடைய பேரனான சின்னதிருமலாசார்யா, ‘விரிவி கலிகினட்டி வேதமுல அர்த்தமெல்ல அரஸி தெலிஸினாடு அன்னமய்ய’ என்று, பரந்து விரிந்த வேதங்களை, ஐயத்திடத்திற்கு இடமின்றிப் புரிந்துகொண்டு, ஹரி மீது பாடல்களாகப் பாடினார் அன்னமய்யா என்று பாடுகிறார்.
‘சித், அசித்தொடு ஈசன் என்று செப்புகின்ற மூவகைத் தத்துவத்தின் முடிவு கண்ட சதுமறை புரோகிதன் கொட்டவிழ்த்த சோலைமன்னு குருகை ஆதி’ என்று வில்லிபுத்தூரார் ‘விசிஷ்டாத்வைத சித்தாந்தத்தின் பொருளை ஸ்வாமி நம்மாழ்வார் தெளிவாக அருளிச்செய்தார்’ என்று தம் நூலில் வணங்குகிறார். சின்னதிருமலாசார்யா, “ ‘அந்தமைன ராமாநுஜாசார்ய மதமுனு அந்துகொனு நிலசிநாடு அன்னமய்யா’ என்று அழகான ராமாநுஜ மதத்தை (விசிஷ்டாத்வைத சித்தாந்தத்தை) ஆவலுடன் பின்பற்றினார் அன்னமய்யா” என்று பாடுகிறார்.
ஸ்வாமி நம்மாழ்வார் பல திவ்யதேசத்து எம்பெருமான்களைப் பாடி இருந்தாலும், அவர், “அகலகிலேன் இறையுமென்று அலர்மேல் மங்கை உரைமார்பா” என்று தீர்க்க சரணாகதி அனுஷ்டித்தது திருவேங்கடவன் திருவடிகளில்தான். அதைப்போலவே, அவர், தமக்கு மிகவும் விருப்பமான கைங்கர்யச் செல்வத்தை “ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி வழுவிலா அடிமை செய்யவேண்டும் நாம்” என்று பாடி, பாரித்ததும் திருவேங்கடமுடையானைத்தான். அன்னமாசார்யாவின் கீர்த்தனைகளில் பெரும்பாலானவை, திருவேங்கடமுடையானைத் துதி செய்பவையே!
நம்மாழ்வார், தம்முடைய திருவாய்மொழிப் பாசுரம் 3-3-4ல், கீழ்க்கண்டவாறு அருளிச் செய்கிறார்:
ஈசன் வானவர்க்கென்பர் என்றால் அது
தேசமோ திருவேங்கடத்தானுக்கு
நீசனேன் நிறைவொன்றுமிலேன் என்கண்
பாசம்வைத்த பரஞ்சுடர்ச்சோதிக்கே
‘அடியேனுடைய தாழ்வைச் சிறிதும் கணிசியாது, அடியேனிடம் பாசம் வைத்த சோதி உருவான திருவேங்கடத்தானை, வானவர்க்கு ஈசன் என்று கூறினால், அது எம்பெருமானைப் புகழ்வதாகக் கொள்ளத்தகுமோ?’ என்கிறார் ஆழ்வார். திருவேங்கடவன் வானவர்களுக்கும் தன்னைக் கொடுத்தான். ஆழ்வாருக்கும் தன்னைக் கொடுத்தான். வானவர்களுக்குத் தன்னைக் கொடுத்தது, அவர்களுடைய நன்மைக்காக; ஆழ்வாருக்குத் தன்னைக் கொடுத்தது, தன்னுடைய ஆனந்தத்திற்காக. இது ஈட்டில் ஒரு அழகான உதாரணத்தின் மூலம் விளக்கப்பட்டுள்ளது.
“பிராதம்யத்துக்கும் பழிக்கும் செங்கல் சீரைக்கும் ஜீவனம் வைப்பாரைப் போன்று, அவர்கள் பக்கல்; நெஞ்சும் உடம்பும் தந்தது எனக்கு” என்கிறார்.
‘திருமணமான ஒருவர் தன் உள்ளத்திற்கு உகந்த ஒரு பெண்ணிடம் உறவு கொண்டாட நேர்ந்தால், உலகத்தார் பழிக்கும், ஒரு சமயம் முதல் மனைவி சந்யாசம் பூண்டு பிச்சை எடுக்கப்புகுந்தால், தன் மானம் போகுமே என்று அஞ்சியும், அவருக்கு ஜீவனாம்சம் தந்து விட்டு, தன் அன்பையும் உடம்பையும் தான் நேசிக்கும் பெண்ணிடம் தந்து விடுவார். அதைப் போல, எம்பெருமான் முதல் மனைவி போன்ற நித்யசூரிகளுக்கு அருள்புரிந்தான். ஆனால், அவன் தன் நெஞ்சையும், (பாசம் வைத்த) உடம்பையும் (பரஞ்சுடர்சோதி) தந்தது, தான் மிகவும் நேசித்த ஆழ்வாருக்கு’ என்று விளக்கப்பட்டிருக்கிறது. “பிராட்டி யோடே கலந்தாற்போலே பேரொளிப் பிழம்பாய் இரா நின்றான்” எனப்பட்டுள்ளது!
இவ்வாறு தன்னைச் சரணடைந்த ஜீவாத்மாவை பிராட்டிக்கு இணையாக அனுபவித்து மகிழ்கிறான் எம்பெருமான். இதற்காக அவன் எவ்வளவு பாடுபடுகிறான்! மந்த்ர ரஹஸ்யமான திருமந்திரத்தையும், அனுஷ்டான ரஹஸ்யமான த்வய மந்திரத்தையும் விதி ரஹச்யமான சரம ஸ்லோகத்தையும் உபதேசித்து அருளுகிறான். “இவன் எப்படியாவது நம்மை வந்து அடையமாட்டானா என்று ஆவலோடு வேங்கடமலையின் மீது நிற்கிறான். ஆனால், ஜீவாத்மாவோ, தேகத்தையே தானாக நினைத்துக்கொண்டு, எம்பெருமான், ஆசார்யர்கள் வாயிலாக உபதேசித்த எந்த உபாயத்தையும் கைக்கொள்ளாமல், ஐம்புலன் இழுக்கும் வழியில் சென்று, எண்ணற்ற பிறவிகள் எடுத்து வீணாகிறான். இவர்களைக் கண்டு வருந்திப் பாடுகிறார் அன்னமாசார்யா.
பல்லவி
நீவேமி ஸேதுவய்யா நீவு தயாநிதி வந்துவு
பாவிஞ்சலேனிவாரி பாபமிந்தே கானி !!
சரணம் 1
பரமபதமொஸகி பாபமடசேனனி
சரம ஸ்லோகமு நந்து சாடிதிவி தொலுதனெ
நிரதினி பூமிலோன நீ வல்ல தப்பு லேது
பரக நம்மனி வாரி பாப மிந்தே கானி !!
சரணம் 2
நீ பாதமுலகு நாகு நெய்யமைன லங்கெனி
யேபுன த்வயார்த்தமுன நிய்யகொண்டிவி தொலுத
தாபுகா நீ வல்ல நிங்க தப்புலேது யெஞ்சி சூசி
பை பை நம்மனிவாரி பாபமிந்தே கானி !!
சரணம் 3
பந்தி புராணமுலனு பக்த ஸுலபுடனனி
அந்தராத்ம வீமாட ஆடிதிவி தொலுதனே
இந்தட ஸ்ரீ வேங்கடேஸ யேமிஸேதுவய்ய நீவு
பந்தான நம்மனி வாரி பாபமிந்தே கானி !!
பல்லவியில் “நீ என்ன செய்வாய் அய்யா! தயாநிதி! இது உன்னை அநுபவிக்கத் தெரியாதவர்களுடைய பாவம்தானே தவிர வேறொன்றுமில்லை” என்கிறார்.
முதல் சரணத்தில், ‘உன் பாவங்களை எல்லாம் போக்கி, உனக்கு பரமபதம் நான் தருகிறேன் என்று சரம ஸ்லோகத்தில் உறுதி அளித்தாய் நீ. இதையாவது நம்பினார்களா? இல்லை. இது அவர்கள் செய்த பாவமே அன்றி உன் மீது தப்பில்லை’ என்கிறார்.
இரண்டாவது சரணத்தில், ‘உன் திருவடிகளே சரணடையத்தக்கவை என்று த்வய மந்திரத்தை உபதேசித்தாய்; ஆனால், நம்பிக்கை இன்மையை மேலும் மேலும் வளர்த்துக் கொண்ட அவர்களுடைய பாவத்தால் இதைக் கைக்கொள்ள இயலவில்லை. உன்மீது எந்தத் தவறும் இல்லை’ என்கிறார்.
மூன்றாவது சரணத்தில், ‘நான் பக்தர்களுக்கு மிகவும் சுலபமானவன்’ என்பதைப் புராணங்களில் பல வேடங்களை ஏற்று நடித்துக் காட்டினான். இவற்றை யாராவது நம்பினார்களா? இல்லை; ஸ்ரீவேங்கடேசா! நீ என்ன செய்வாய்? பாவம்! இது உன்னை நம்பாதவர்கள் பாவமே தவிர வேறு இல்லை’ என்று கீர்த்தனையை முடிக்கிறார்.
வைகாசி மாதத்தில் அவதரித்த ஸ்வாமி நம்மாழ்வார், அன்னமாசார்யார் ஆகிய இரு மஹான்களின் திருவடிகளில் பணிந்து, பிராட்டிக்குச் சமமாக எம்பெருமான் நம்மை பாவிக்கும் நிலை அடைவோமாக!