மனக்கவலைகள் அனைத்தையும் மறந்து இரண்டரை மணிநேரம் விழுந்து விழுந்து சிரிக்க வேண்டுமா? தாராளமாக இந்த படத்தை பார்க்கலாம். உதயநிதியின் வழக்கமான நடிப்பு, நயனின் கவர்ச்சி, சந்தானத்தின் டைமிங் வசனம், ‘நான் கடவுள் ராஜேந்திரனின் மிரட்டல் கலந்த காமெடி, ஹாரீஸ் ஜெயராஜின் ரசிக்க வைக்கும் பாடல் போன்ற அம்சங்கள் நிறைந்த காமெடி கலாட்டாதான் ‘நண்பேண்டா
திருச்சியில் இருக்கும் நண்பர் சந்தானத்தை பார்க்க வரும் உதயநிதி, அங்கு தற்செயலாக நயன்தாரா பார்த்து, பார்த்தவுடனே காதல் கொள்கிறார். நண்பன் வேலை செய்யும் ஓட்டலிலேயே வேலைக்கு சேர்ந்து நயன்தாராவை கரெக்ட் செய்யும் வேலையையும் பார்ட் டைமாக பார்க்கின்றார் உதயநிதி.
ஆக்சிஸ் வங்கியில் வேலை செய்யும் நயன்தாரா, முதலில் தமிழ் சினிமா மரபுப்படி தன்னை காதலிக்கும் ஹீரோவை உதாசீனப்படுத்தி பின்னர் காதலிக்கின்றார். தனது காதலை தெரிவிக்கும் முன்னர் தனது ப்ளாஷ்பேக்கையும் உதயநிதி தெரிந்து கொள்ள வேண்டும் என்று முடிவு செய்த நயன்தாரா, அவரை தனியிடத்திற்கு வரவழைத்து தான் ஒரு கொலைகாரி என்றும், ஜெயில் தண்டனை அனுபவித்த குற்றவாளி என்றும் உதயநிதியிடம் கூறுகிறார்.
தன்னுடைய ப்ளாஷ்பேக்கை கேட்டு உதயநிதி ஷாக் ஆவார் என எதிர்பார்த்த நயன்தாராவுக்கு கிடைத்தது ஏமாற்றமே. நயனின் ப்ளாஷ்க்கை கேட்டு விழுந்து விழுந்து சிரிக்கின்றார் உதயநிதி. அவர் ஏன் சிரித்தார்? அதற்கு பிறகு அவர்களுடைய காதல் என்ன ஆனது? என்பதுதான் மீதிக்கதை
உதயநிதி பெரிதாக ரிஸ்க் எடுத்தெல்லாம் நடிக்கவில்லை. வந்தவரை போதும் என்று நகைச்சுவையை மட்டும் அசால்ட்டாக கொடுத்துள்ளார். நயனின் ப்ளாஷ்பேக்கை கேட்டு விழுந்து விழுந்து அவர் சிரிப்பதோடு மட்டுமின்றி ஆடியன்ஸையும் சேர்த்து சிரிக்க வைக்கின்றார். சந்தானத்துடன் வேலை செய்யும் போது ஓட்டலை எப்படி முன்னேற்றுவது, வங்கியில் லோன் கேட்கும் ஐடியாவை கூறுவது, தமன்னா ஓட்டலை திறந்து வைக்க வரும்போது அவரிடம் வழிவது, கொலைகார பட்டத்துடன் ஜெயிலில் இருக்கும்போதும் காமெடி செய்வது, ஜெயிலில் இருந்து தப்பிப்பதையும் கூட சீரியஸாக செய்யாமல் சிரிப்பை வரவழைப்பது என ஆடியன்ஸ் ஒரு சீனில் கூட சிரிப்பை மறந்து விடக்கூடாது என்ற முடிவுடன் உதயநிதி களமிறங்கியுள்ளார் என்பதை படம் பார்க்கும்போது தெரிந்து கொள்ளலாம்.\
இந்த படத்தில் சந்தானத்தை பார்க்கும்போது அவர் இரண்டாவது ஹீரோவா அல்லது காமெடியனா? என்ற சந்தேகம் வருகிறது. உதயநிதியுடன் கிளைமாக்ஸ் வரை படம் முழுவதும் வரும் கேரக்டர், ஷெரீனுடன் ஜோடி சேர்ந்து கொண்டு கலக்குவது, நயனிடம் உதயநிதியை ‘அண்ணா’ என்று கூப்பிட சொல்வது, இரண்டு ரெளடி கோஷ்டிகளுடன் மாறி மாறி மாட்டிக்கொண்டு உயிரை காப்பாற்ற தவிப்பது என அவருடைய பாணியை முழுவதும் பயன்படுத்தியுள்ளார்.
அழகு பதுமையாக வரும் நயன்தாரா, பாடல் காட்சிகளில் மட்டும் கவர்ச்சியை அள்ளி தெளித்துள்ளார். சீரியஸாக அவர் ஒருசில காட்சிகளில் நடிக்க முயன்றாலும், அந்த காட்சியை உதயநிதியும், சந்தானமும் சேர்ந்து காமெடியாக மாற்றிவிடுவதால் நயன்தாராவுக்கு அதிக வேலை இந்த படத்தில் இல்லை.
ஷெரீன், சூசன், கருணாகரன், சாயாஜி ஷிண்டே, அனைவரும் கொடுத்த வேடத்தை கச்சிதமாக செய்துள்ளனர்.
ஹாரீஸ் ஜெயராஜின் இசையில் மூன்று பாடல்கள் ஓகே ரகம். பாடல் காட்சிகள் அனைத்துமே வெளிநாட்டு லொகேஷனில் படமாக்கியிருப்பது கண்களுக்கு விருந்து. பின்னணி இசையை பிரமாதமாக அமைக்கும் அளவுக்கு காட்சிகள் இல்லை என்பதால் ஓகே ரகம்.
இயக்குனர் ஜெகதீஷ் தனது குருநாதர் பாணியை அப்படியே பின்பற்றியுள்ளார். முழுக்க முழுக்க நகைச்சுவை படமாக எடுக்க முடிவு செய்த இயக்குனர் முதல் பாதியில் வரும் ஒருசில மொக்கை காமெடி காட்சிகளை தவிர்த்திருக்கலாம். அடுத்த படத்திலும் தனது குருநாதர் ராஜேஷ் பாணியை பயன்படுத்தாமல் இருந்தால் கோலிவுட்டில் ஜெகதீஷுக்கும் ஒரு இடம் இருக்கும்.
மொத்தத்தில் ‘நண்பேண்டா’ கலாட்டா காமெடி கொண்டாட்டம்.