அமெரிக்க முன்னாள் அதிபர் ரீகன் மனைவி நான்சி ரீகன் மரணம். ஒபாமா தம்பதியினர் இரங்கல்
கடந்த 1981ஆம் ஆண்டு முதல் 1989ஆம் ஆண்டு வரை அமெரிக்க அதிபராக இருந்த ரொனால்ட் ரீகன் அவர்களின் மனைவி நான்சி ரீகன் நேற்று லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் காலமானார். அவருக்கு வயது 94. பிரபல ஹாலிவுட் நடிகராக இருந்து அமெரிக்க அதிபராகிய ரீகனின் மனைவி நான்சி கடந்த சில நாட்களாக உடல்நலம் இன்றி இருந்ததாகவும், இந்நிலையில் அவர் நேற்று காலமானதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. நான்சி ரீகனும் ஒரு ஹாலிவுட் நடிகை என்பது குறிப்பிடத்தகக்து.
தனது கணவர் ரீகன் அல்சைமர் என்ற நோயால் இறந்ததால் அந்த நோய் குறித்து உலக மக்களிடையே விழிப்புணர்ச்சி ஏற்படுத்த உலகம் முழுவதும் தீவிர பிரச்சாரம் செய்தவர் நான்சி ரீகன் என்பது குறிப்பிடத்தக்கது.
நான்சி ரீகனின் மறைவுக்கு அதிபர் ஒபாமா மற்றும் மிச்சைல் ஒபாமா இணைந்து வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “‘அமெரிக்க அதிபரின் அதிகாரபூர்வ இல்லமான வெள்ளை மாளிகையில் வாழ்வதற்கு நம்மை தயார்படுத்தக்கூடிய ஆசானாக எதுவுமில்லை என நான்சி முன்னர் குறிப்பிட்டிருந்தார். ஆனால், நாங்கள் அதிர்ஷ்டசாலிகள். வெள்ளை மாளிகையில் நான்சி ரீகன் வாழ்ந்துச் சென்ற முன்னுதாரணமான வழிமுறையை நாங்கள் பின்பற்றியதால் எங்களுக்கு வெள்ளை மாளிகை வாழ்க்கை சிரமமின்றி அமைந்தது.
முதல் பெண்மணி என்ற தகுதியை அவரது முந்தைய அறிவுரைக்கு இந்த வேளையில் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். அமெரிக்க மக்களின் மரியாதைக்குரிய நாட்டின் முதல் பெண்மணியாக அவர் இங்கு வாழ்ந்தபோதும், முன்னாள் அதிபர் ரீகனுடன் வெள்ளை மாளிகையில் இருந்து அவர் பிரியாவிடை பெற்றபோதும் எங்களுக்கெல்லாம் பெருமைக்குரிய மிகப்பெரிய முன்னுதாரணமாக நான்சி இருந்தார். நாட்டின் முதல் பெண்மணி என்ற தகுதியை அவர் நிலைநாட்டிச் சென்றார்.
அல்சைமர் நோய்க்கு எதிராக அவர் ஆற்றிவந்த பிரசாரமும், போராட்டமும் பல்வேறு நோயாளிகளை குணப்படுத்துவதிலும், பலரது உயிர்களை பாதுகாப்பதிலும் உறுதுணையாக இருந்துள்ளது. மீண்டும் தனது கணவருடன் சேர்ந்து வாழ்வதற்காக நம்மை எல்லாம் பிரிந்துச் சென்ற நான்சி ரீகனின் பிள்ளைகள் மற்றும் குடும்பத்தாருக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்’
இவ்வாறு ஒபாமா தம்பதியினர் தங்கள் இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளனர்.