விஜயகாந்தின் வீழ்ச்சிக்கு யார் காரணம்? நாஞ்சில் சம்பத் கண்டுபிடித்த உண்மை
சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு கொடுத்த பேட்டியின் காரணமாக துணை கொள்கை பரப்பு செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட நாஞ்சில் சம்பத், தற்போது மீண்டும் ஒரு பேட்டியை அளித்துள்ளார். அந்த பேட்டியில் விஜயகாந்தின் வீழ்ச்சிக்கு அவரது மனைவி பிரேமலதாதான் காரணம் அவர் தெரிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சமீபத்தில் நடைபெற்ற காஞ்சிபுரம் தேமுதிக மாநாட்டில் பிரேமலதாவின் பேச்சு சகிக்க முடியாதவாறு இருந்ததாகவும், தனக்காகவும் தன்னுடைய தம்பியின் நலனுக்காகவும் விஜயகாந்த் என்ற நட்சத்திரத்தை பிரேமலதா அழுக்காக்கி விட்டதாக அவர் கூறியுள்ளார். மேலும் திமுகபோலவே தேமுதிகவும் குடும்ப அரசியல் செய்வதாகவும், மனைவி, மகன், மச்சினன் ஆகியோர் கட்சியின் முக்கிய பொறுப்புகளில் உள்ளனர் என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேலும் தன்னை கட்சியின் பொறுப்பில் இருந்து ஜெயலலிதா நீக்கியதற்கான காரணங்களை ஆராய விரும்பவில்லை என்றும், தன்னுடைய அதிமுக பயணம் தொடரும் என்றும் கேள்வி ஒன்றுக்கு அவர் பதிலளித்துள்ளார்.,
மேலும் தேமுதிகவை கூட்டணியில் சேர்க்க திமுக மடிப்பிச்சை ஏந்தும் நிலைக்கு வந்துவிட்டதாகவும், தேமுதிகவுடன் திமுக கூட்டணி வைத்தால் கருணாநிதிக்கு அவமானம் மட்டுமே மிஞ்சும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் வெள்ள பாதிப்பால் அதிமுகவுக்கு எதிரான அலை வீசுகிறது என்பது முற்றிலும் தவறான கருத்து என்றும் இயற்கை பேரிடரை முதல்வர் எதிர்கொண்ட விதத்தை மத்திய குழுவினரும், மத்திய அரசும் பாராட்டியுள்ளது என்றும், வெள்ள பாதிப்பு ஏற்பட்ட இடங்களில் முதல்வரின் நடவடிக்கைகளை மக்கள் நன்றியுடன் நினைத்துப் பார்ப்பதாகவும் நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.