கலகங்களையும் ஏற்படுத்தி நன்மை செய்யும் நாரதர் வரலாறு.

  ta_10உலகம் தோன்றிய காலத்திலேயே தோன்றிய ரிஷி நாரதர். அவர் பாதாளம், மேல்லோகம், பூலோகம் ஆகிய மூவுலகங்களுக்கும் சஞ்சாரம் செய்பவர் என்பதால் திரிலோக சஞ்சாரி என்று அழைக்கப்பட்டார். ஒரு நிகழ்ச்சியைத் திட்டமிட்டு நடத்தி வெற்றியடையச் செய்வதில் இவர் கைதேர்ந்தவர்.

பரம்பொருளான நாராயணனின் நாபிக்கமலத்தில் (தொப்புள்) பிரம்மா அவதாரம் செய்தார். பிரம்மாவின் மனதிலிருந்து சனகர், சனந்தனர், சனாதனர், சனத்குமாரர் என்று நால்வர் பிறந்தனர். இவர்களைப் பார்த்து பிரம்மா,நீங்கள் எல்லாரும் ஆயிரங்கோடி மக்களைப் பெற்று பிரபஞ்சத்தை விஸ்தரியுங்கள், என்று கட்டளையிட்டார். ஆனால், அவர்களுக்கு அதில் சம்மதமில்லை. பரம்பொருளான ஸ்ரீமந்நாராயணமூர்த்தியை அடைவதே தங்கள் குறிக்கோள் என்ற அவர்கள், இல்லறத்தில் ஈடுபட மறுத்துவிட்டனர்.

எனவே பிரம்மா, மீண்டும் உலக சிருஷ்டியைப் பற்றிய சிந்தனையில் ஆழ்ந்தார். தன் உடல் உறுப்புகள் ஒவ்வொன்றில் இருந்தும் புலஸ்தியர், புலஹர், அத்ரி, கிருது, மரீசி, ஆங்கிரஸ், பிருகு, தட்சன், கர்தமர், வசிஷ்டர் என்று ரிஷிவர்க்கத்தைப் படைத்தார். இவர்களில் பிரம்மாவின் கழுத்தில் இருந்து பிறந்தார் நாரதர். பிரபஞ்சத்தில் பலகோடி மக்களை உருவாக்கும்படி படைப்புக்கடவுள் அந்த ரிஷிகளுக்கு கட்டளையிட்டார்.

இவர்களில் நாரதரைத் தவிர மற்றவர்கள், தந்தையின் கட்டளையை ஏற்று, இவ்வுலகை விஸ்தரிக்கும்பணியில் முழுமூச்சாய் ஈடுபடத் தொடங்கினர். நாரதருக்கு இதில் உடன்பாடில்லை. தந்தையின் சொல்லை புறக்கணித்தார். அதோடு மட்டுமல்லாமல், பிரம்மாவுக்கே உபதேசம் செய்யும் அளவுக்குத் துணிந்து விட்டார்.

Narad_-_Vintage_Print

அப்பா! நீங்கள் தீயவழியில் செல்லும்படி என்னைத் தூண்டுகிறீர்கள். சத்விஷயங்களைப் பிள்ளைக்குச் சொல்லித் தரவேண்டியது தான் ஒரு தந்தையின் கடமை. அதைவிடுத்து இவ்வாறு தவறுக்கு வழிவகுப்பது நல்லதல்ல. நான் எம்பெருமானுடைய பாதார விந்தங்களை அன்றி மற்றொன்றைச் சிந்திக்காதவன். உலக சுகங்களை மறந்த என்போன்றவர்களை ஆதரிக்க வேண்டியது தான் உங்கள் கடமை,என்று புத்திமதி சொன்னார்.

பிரம்மதேவருக்கு கோபம் கொப்பளித்துக் கொண்டு வந்தது. தன் பிள்ளை நாரதரைச் சபித்தே விட்டார். நாரதா! உன் அறிவு அழிந்து போகக் கடவது. நீ பெண் பித்தனாக வாழ்வாய். பருவமங்கையர் ஐம்பது பேரை மணம் செய்து கொண்டு காமாந்தகாரனாகத் திரிவாய். சங்கீதம், வீணையில் பாண்டித்யம், குரல்வளம் என்று குதூகலத்தோடு சிற்றின்பத்தில் மூழ்கிப் போவாய். உன் அழகையும், இளமையையும் கண்டு பெண்கள் மயங்கித் திரிவார்கள். பார்ப்பவர் கண்ணுக்கு கந்தர்வனைப் போல வாலிபனாகத் தெரிவாய், என்று சாபமிட்டார்.

மேலும், நீ தேவகூட்டத்தில் உபபர்ஹணன் என்று பெயரில் பிறந்து, இரண்டு லட்சம் ஆண்டுகள் சுகபோகங்களில் திளைப்பாய். அப்பிறவி முடிந்ததும், மறுபடியும் ஒரு தாசியின் வயிற்றில் பிறப்பாய். அப்போது உத்தம சிரேஷ்டர்களின் சகவாசம் உண்டாகும். அவர்கள் சாப்பிட்ட எச்சிலை உண்ட புண்ணியத்தால் ஸ்ரீகிருஷ்ணரின் அருள் கிடைக்கும். மீண்டும் என் மகனாகப் பிறவி எடுப்பாய். அப்போது தான் ஞானம் உண்டாகும், என்று சாபமிட்டு தன் கோபத்தை தணித்துக் கொண்டார். நாரதர் பிரம்மாவின் சாபத்தை கேட்டு கதறி ஓலமிட்டார்.

அப்பா! இது தான் ஒரு தந்தைக்கு அழகா! நான் பல நீசப்பிறவிகளை எடுப்பதால் உங்களுக்கு என்ன பெருமை உண்டாகப்போகிறது. இருந்தாலும் உங்களுக்காக இப்பிறவிகளை மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்கிறேன். ஆனாலும், என் சிறுவிண்ணப்பத்தை ஏற்றுக் கொள்ளுங்கள். எப்பிறவி எடுத்தாலும், எம்பெருமான் ஸ்ரீமந்நாராயணனின் பாதாரவிந்தங்களை மறக்காத பாக்கியத்தை மட்டும் தாருங்கள்,என்று வேண்டிக் கொண்டார். நாராயணா, நாராயணா என்று சொல்லிக்கொண்டே திரிந்தார்.

Possibly_Narada,_the_inventor_of_the_Vina.
இந்த சந்தர்ப்பத்தில் புஷ்கரம் என்னும் ÷க்ஷத்திரத்தில் கந்தர்வன் ஒருவன் நீண்டகாலமாக பிள்ளையில்லாமல் வருந்திக் கொண்டிருந்தான். அவன் சிவபெருமானை நோக்கி தவம் இருந்தான். கந்தர்வனின் தவத்தை மெச்சிய சிவன் அவன் முன்தோன்றி பிள்ளை வரம் தந்தார். பிரம்மசாபத்தின் பயனாக, நாரதர் கந்தர்வனின் மகனாக உபபர்ஹணன் என்ற பெயரில் பிறந்தார். சித்திரரதன் என்ற மன்னனின் மகள்களான ஐம்பது பெண்களையும் மணந்து சிற்றின்பத்தில் திளைத்தார். ஆனால், வீணாகானமும், ஸ்படிகமாலையும் கொண்டு ஹரிபக்தி கொண்டவனாகவும் வாழ்ந்தார். கந்தர்வனாக இருக்கவேண்டிய காலம் முடிவடைந்ததும் உயிர்நீத்தார். கான்யகுப்ஜ தேசத்தில் திரமிளன் என்ற அரசன் இருந்தான். அவனது நாட்டில் பஞ்சம் தலைவிரித்தாடியது.

இந்த சந்தர்ப்பத்தில் திரமிளனின் மனைவி கலாவதி கருவுற்று ஒரு ஆண்குழந்தையை ஈன்றாள். திரமிளனுக்கு குழந்தை வந்த நேரம், நாட்டில் மழை பெய்து நீர்வளம் நிறைந்தது. அதனால் நீர் என்ற பொருளில் நாரதன் என்று குழந்தைக்கு பெயரிட்டனர். (நாரம் என்றால் தண்ணீர். கடலில் மிதப்பவர் என்பதால் தான் திருமாலுக்கே நாராயணன் என்ற பெயர் ஏற்பட்டது) ஒருநாள் நாரதரின் சகோதரர்களான சனகாதி முனிவர் நால்வரும் அதிதிகளாக கலாவதியிடம் வந்து உணவு பெற்றனர். சிறுவன் நாரதன் அவர்கள் சாப்பிட்ட மீதி உணவை வாங்கி சாப்பிட்டான். பணிவோடு நடந்து கொண்ட அந்தச் சிறுவன் மீது அன்பு கொண்டு அதிதிகள், அவனுக்கு ஸ்ரீகிருஷ்ணமந்திரத்தை உபதேசித்தனர். அன்று முதல் சிறுவன் நாரதன் கிருஷ்ணதாசனாக மாறிவிட்டான்.

சதா  கிருஷ்ண தியானத்தில் இருந்த நாரதருக்கு கிருஷ்ணரும் குழந்தை வடிவில் காட்சி தந்து மறைந்தார். மீண்டும் கிருஷ்ண தரிசனம் வேண்டி அழுதார் நாரதர். அப்போது, வானில் அசரீரி ஒலித்தது. நாரதா! பிரம்மாவின் சாபம் இன்றோடு உனக்கு நீங்கியது. மீண்டும் அவர் உடம்பிலேயே ஐக்கியமாகி விடுவாய் என்றது. பின்னர் மீண்டும் பிரம்மாவின் கழுத்தில் இருந்து பிறவி எடுத்து திரிலோகசஞ்சாரியாக மாறிவிட்டார்.

ராமாயணத்தை எழுதிய வால்மீகிக்கு ராமநாமத்தை உபதேசித்தவர் நாரதரே. பக்தபிரகலாதனுக்கு தாயின் கருவில் இருக்கும்போதே அஷ்டாக்ஷர மந்திரத்தை உபதேசித்து அவனை நாராயண பக்தனாக்கினார். சின்னஞ்சிறு குழந்தை துருவனுக்கு விஷ்ணுமந்திரத்தை உபதேசித்து அவனை நட்சத்திர மண்டலத்தில் ஒளிவிடச் செய்தார். கலகப்பிரியராக இருந்து பல கலகங்களையும் ஏற்படுத்தி நன்மை ஏற்படச் செய்தார்.

Leave a Reply