பங்குச்சந்தையின் தொடர் வீழ்ச்சி. அனில் அம்பானி உள்பட தொழிலதிபர்களுடன் பிரதமர் அவசர ஆலோசனை
கடந்த சில நாட்களாக இந்திய பங்குச்சந்தை தொடர்ந்து சரிந்து கொண்டே போகின்றது. அதேபோல் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பும் வீழ்ச்சி அடைந்து கொண்டே செல்கின்றது. இதன் காரணமாக பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் கவலை அடைந்துள்ளனர். கடந்த 14 மாதங்களுக்கு முன்னர் நரேந்திர மோடி பதவியேற்ற புதிதில் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு சுமார் 60ரூபாய் என்று இருந்த நிலையில் தற்போது 67 ரூபாயாக மாறியுள்ளதால் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் பல லட்சம் கோடி ரூபாயை கடந்த ஒருசில வாரங்களில் இழந்துள்ளனர்.
இந்நிலையில் இந்திய பங்குச் சந்தையின் ஏற்றம் இறக்கம் குறித்து பிரதமர் மோடி தொழிலதிபர்களுடன் அவசர ஆலோசனை ஒன்றை இன்று நடத்தினார். தொடரும் பங்குச் சந்தை சரிவால் முதலீட்டாளர்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருவது குறித்தும் பங்கு சந்தையின் சென்செக்ஸ் 25 ஆயிரம் புள்ளிகளாக குறைந்தது குறித்தும் இந்த ஆலோசனையில் விவாதிக்கப்பட்டது. பங்குச்சந்தை வீழ்ச்சியால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்பு நிலைமைகள் குறித்தும் பிரதமர் நரேந்திர மோடி இன்று தொழில் அதிபர்கள் மற்றும் வல்லுனர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள், ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன், நிதி அயோக் துணை தலைவர் அரவிந்த் பனகரியா மற்றும் இந்திய முன்னணி தொழில் அதிபர்கள் சுனில் மித்தல், சசிரூயா, அனில் அம்பானி, கௌவுதம் அதானி உள்ளிட்ட 27 முக்கிய பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். உலக அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நிலை, அதனால் இந்தியாவில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் அதை எதிர் கொள்ள வேண்டியது எப்படி என்பது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதகாக் கூறப்படுகிறது.